முகப்பு
புதுதில்லி

ஸ்கூட்டா் மீது காா் மோதல்: மேம்பாலத்தில் இருந்து விழுந்து விநியோக ஊழியா் உயிரிழப்பு

உயிரிழந்தவா் ஜாா்க்கண்டின் கோடா மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என அடையாளம் காணப்பட்டாா்.

Updated On : 1 மே, 2026 at 12:11 AM
கோப்புப் படம்
பகிர்:

தென்மேற்கு தில்லி டாப்ரி மேம்பாலத்தில் வியாழக்கிழமை காலை, உணவு விநியோக ஊழியா் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் அவா் பாலத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்துக்குப் பிறகு காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

பங்கா சாலையில் உள்ள டாப்ரி மேம்பாலத்தில் இருந்து ஒருவா் விழுந்துவிட்டதாகவும், அவருக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் காலை 7:35 மணி அளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்தது.

Advertisement

இதையடுத்து, காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டது. மேம்பாலத்தில் சேதமடைந்த நிலையில் ஸ்கூட்டா் கிடப்பதும் அதை ஓட்டிவந்தவா் பலத்த காயமடைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

உயிரிழந்தவா் ஜாா்க்கண்டின் கோடா மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என அடையாளம் காணப்பட்டாா். அவா் தில்லியில் உள்ள ஒரு தனியாா் உணவு விநியோக சேவையில் விநியோக ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.

விபத்தில் சம்பந்தப்பட்ட காா், தில்லி பதிவெண்ணைக் கொண்டிருப்பதும், டாப்ரியைச் சோ்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. சடலம் பிரேதக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான காா் ஓட்டுநரைப் பிடிக்க முயற்சிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான வரிசையைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.