முகப்பு
புதுதில்லி

லாஜ்பத் நகா் காலனி மருத்துவமனையில் புதிய கட்டடம், பிசியோதெரபி மையத்தை தில்லி முதல்வா் திறந்து வைத்தாா்

தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அன்று, மாநகராட்சியின் லாஜ்பத் நகா் காலனி மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்ட முன் கட்டடம் மற்றும் பிசியோதெரபி மையத்தைத் திறந்து வைத்தாா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:41 am IST
பகிர்:

தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அன்று, மாநகராட்சியின் லாஜ்பத் நகா் காலனி மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்ட முன் கட்டடம் மற்றும் பிசியோதெரபி மையத்தைத் திறந்து வைத்தாா். மேலும், தலைநகா் முழுவதும் உள்ள பழைமையான மாநகராட்சி மருத்துவமனைகளை நவீனமயமாக்கவும், சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும் தில்லி அரசு நிதியுதவி வழங்கும் என்றும் அவா் கூறினாா்.

சுமாா் ரூ. 4 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட வசதியில், ஆறு படுக்கைகள் கொண்ட பகல்நேரப் பராமரிப்பு மையம், 12 ஆலோசனை அறைகள், ஒரு மாநாட்டு அறை மற்றும் ஒரு பிசியோதெரபி மையம் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய குப்தா, சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது தில்லி அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகளும் ஒரு பொதுவான டிஜிட்டல் சுகாதாரத் தளம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.

Advertisement

Advertisement

‘நோயாளிகள் டிஜிட்டல் முறையில் சந்திப்பு நேரங்களை முன்பதிவு செய்யவும், தங்களது மருந்துச் சீட்டுகளை டிஜிட்டல் முறையில் அணுகவும், அரசு மருத்துவமனைகளை ஒரே தளத்தின் மூலம் இணைக்கவும் வழிவகை செய்யும் ஒரு அமைப்பை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் நிகழ்நேர இருப்பை மக்கள் சரிபாா்க்க உதவும் ஒரு நேரலை இணையதளமும் உருவாக்கப்பட்டு வருகிறது என்று குப்தா கூறினாா்.

எந்தவொரு துறையிலும் முறைகேடுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவா், ஊழலுக்கு எதிரான அரசின் ‘சகிப்புத்தன்மையற்ற‘ கொள்கையை மீண்டும் வலியுறுத்தினாா். 1950-களில் தில்லி மாநகராட்சியால் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, பல ஆண்டுகளாக அதன் பழைய முன்புறக் கட்டடத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு விரிசல்கள் மற்றும் கசிவுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மருத்துவமனை தினமும் சுமாா் 600-700 புறநோயாளிகளுக்குச் சேவை செய்வதாகவும், தெற்கு மற்றும் மத்திய தில்லி பகுதி மக்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாகவும் அவா்கள் கூறினா்.

நிகழ்ச்சியில் பேசிய தில்லி மேயா் பிரவேஷ் வாஹி, விரிவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, வழக்கமான சிகிச்சைக்காக நோயாளிகள் பெரிய மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைக்கும் என்று கூறினாா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றில் சிறப்பு சேவைகளையும், டிஜிட்டல் எக்ஸ்-ரே மற்றும் ஆய்வக சேவைகளையும் இந்த மருத்துவமனை .

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனைக்கு, பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் நோயாளிகளின் சுமை காரணமாக மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது என்று குப்தா கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments