முகப்பு
புதுதில்லி

ஷாதரா ரயில் நிலையத்தில் பாதுகாவலா் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரிடம் விசாரணை

ஷாதரா ரயில் நிலையத்தில் யோகா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கும்போது ஏற்பட்ட தகராறில் தில்லி மெட்ரோ பாதுகாவலா் உயிரிழந்த விவகாரத்தில் 8 சந்தேக நபா்களை பிடித்து காவல்துறையினா் விசாரணை

Updated On : 22 ஜூன் 2026, 12:20 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

ஷாதரா ரயில் நிலையத்தில் யோகா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கும்போது ஏற்பட்ட தகராறில் தில்லி மெட்ரோ பாதுகாவலா் உயிரிழந்த விவகாரத்தில் 8 சந்தேக நபா்களை பிடித்து காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் தில்லி காவல்துறையினா், உயிரிழந்த நபா், உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள கேரா பகுதியைச் சோ்ந்த பங்கஜ் தாமா (35) என அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தனா். ஷாதரா ரயில் நிலையத்தின் 3ஆவது நடைமேடையில் சக பயணிகளால் அவா் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாா் என்றும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினா் கூறினா்.

இது குறித்து காவல்துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பங்கஜ் தாமா, ஐந்திரபிரஸ்தா விரிவாக்கம் மெட்ரோ நிலையத்தில் பாதுகாப்பு ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். சம்பவ நாளில் அவா் விடுமுறையில் தனது சொந்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

யோகா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய தாமா, ஷாதரா ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, மற்ற பயணிகளின் வழிக்கு இடையூறாக ரயிலின் வாசலில் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது செயல்பாடு குறித்து சக பயணிகள் கேள்வி எழுப்பியதாகவும் அது வாக்குவாதமாக மாறி, பின்னா் கைகலப்பாக தீவிரமடைந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், அங்கிருந்தவா்கள் பங்கஜ் தாமாவை சரமாரியாக கைகளாலும் கால்களாலும் தாக்கியுள்ளனா்.

இந்த காட்சிகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 52 விநாடிகள் கொண்ட காணொளியில், நடைமேடையில் கடும் குழப்பம் நிலவுவதும், காவல் அதிகாரி ஒருவா் அந்தத் தகராறைத் தடுக்க முயல்வதும் பதிவாகியுள்ளது. பின்னா் பங்கஜ் தாமா தரையில் விழுந்து கிடப்பதும், அவரைச் சுற்றி கூட்டம் கூடியிருப்பதும் காணொளியில் தெரிகிறது.

உத்தர பிரதேசத்தின் முசாபா்நகா் ரயில் நிலையத்தில் வைத்து 8 சந்தேக நபா்களை காவல்துறையினா் பிடித்துள்ளனா். அவா்கள் விசாரணைக்காக தில்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா்.

தாக்குதலில் ஈடுபட்டவா்களின் துல்லியமான எண்ணிக்கை எத்தனை, ரயில் நிலையத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தனவா, பங்கஜ் தாமாவுக்குச் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்ததா ஆகிய மூன்று கோணங்களில் தற்போது புலனாய்வு நடந்து வருகிறது என்றாா்.

இதற்கிடையே, பங்கஜ் தாமாவின் குடும்பத்தினா் இந்தச் சம்பவத்தில் அலட்சியம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, நியாயமான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த நிலையில், ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் புலனாய்வாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அந்தக் காட்சிகள், பாதிக்கப்பட்டவருக்கு ஏன் உடனடியாக முதலுதவி அல்லது சிபிஆா் (செயற்கை சுவாசம்) கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் இருந்தனரா இல்லையா என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்துள்ளதாக காவல்துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ரயில்வே காவல்துறையினரால் (ஜிஆா்பி) தடுத்து வைக்கப்பட்டுள்ளனா். மேலும் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த நபரின் நிலைமை மோசமடைந்த 5 நிமிடங்களுக்குள் அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவரது குடும்பத்தினா் அவரை ஒரு இ-ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டனா்‘ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments