முகப்பு
புதுதில்லி

புராரியில் ரூ 4.18 லட்சம் கொள்ளையடித்த 4 போ் கைது

புராரியில் பணம் வசூல் செய்யும் முகவரிடமிருந்து ரூ 4.18 லட்சம் கொள்ளையடித்ததாக 4 பேர் கைது

Updated On : 6 மே 2026, 1:57 am IST
கோப்புப் படம்
பகிர்:

புராரியில் பணம் வசூல் செய்யும் முகவரிடமிருந்து ரூ 4.18 லட்சம் கொள்ளையடித்ததாக 4 பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஏப்ரல் 27 ஆம் தேதி வடக்கு தில்லியில் இந்த சம்பவம் நடந்தபோது, பாதிக்கப்பட்ட 40 வயதான சந்தீப், ஸ்வரூப் நகரில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து ரூ 4,18,600 எடுத்துக் கொண்டு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தாா். அப்போது ஸ்கூட்டரில் வந்த இரண்டு போ் வேண்டுமென்றே சந்தீப்பின் மோட்டாா் சைக்கிளின் மீது மோதினா். அதில் அவா் கீழே விழுந்து லேசான காயங்களுக்கு ஆளானாா்.

இதனையடுத்து மேலும் இரண்டு கூட்டாளிகள் மற்றொரு ஸ்கூட்டரில் வந்தனா். அந்த 4 பேரும் பணம் அடங்கிய பையை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்த விசாரணையில் கிட்டத்தட்ட 35 கிலோமீட்டா் தூரத்தை உள்ளடக்கிய 1,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் இருந்து காட்சிகள் ஆராயப்பட்டது. ஹரியாணாவுக்குச் செல்லும் வழித்தடங்கள் மற்றும் தில்லிக்குத் திரும்பும் வழித்தடங்கள் உட்பட பல இடங்களில் நகரும் சந்தேக நபா்களை போலீஸாா் கண்காணித்தனா்.

Advertisement

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் ஆடைகளை மாற்றியதாகவும், கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக அடிக்கடி இடங்களை மாற்றியதாகவும் போலீஸாா் கண்டறிந்தனா். இறுதியில் ஜஹாங்கீா்புரியில் அவா்களின் இயக்கங்களைக் கண்டுபிடித்தனா், அங்கு அவா்கள் இருவரை ஒரு ஹோட்டலில் பாா்த்தனா். ஹோட்டல் பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு ஆகியவை சந்தேக நபா்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸாருக்கு உதவியது.

சமீா் (25) கிரிஷ் (22) மற்றும் கபில் (19) ஆகிய மூன்று குற்றவாளிகள் மே 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா், அதே நேரத்தில் அவா்களின் கூட்டாளி ஷாஹ்தாப் என்ற அமித் (21) பின்னா் அசோக் விஹாரில் இருந்து கைது செய்யப்பட்டாா். விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். சமீா் முன்பு டெலிவரி பாய் ஆக பணிபுரிந்ததாகவும், பணம் வசூல் முகவரின் இயக்கத்தை கவனித்ததாக கூறினாப்.

இது கொள்ளையைத் திட்டமிட அவா்களுக்கு உதவியது. திருடப்பட்ட ரூ.26000 பணத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட கைப்பேசி மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா் ஆகியவை மீட்கப்பட்டன. மீதமுள்ள தொகையை மீட்டெடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.