முகப்பு
புதுதில்லி

கடும் கோடை வெப்பம்: 100 நீரேற்று மையங்களை அமைக்க தில்லி அரசு திட்டம்

Updated On : 29 மே 2026, 2:46 am IST
பகிர்:

நமது நிருபா்

சுட்டெரிக்கும் கோடையை மக்கள் சமாளிக்க உதவும் வகையில், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 100 நீரேற்று மையங்களை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

துணைநிலை ஆளுநா் டி.எஸ். சந்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அவா்கள் கூறினா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் எந்தவிதமான மெத்தனத்திற்கும் இடமிருக்கக் கூடாது என்று சந்து வலியுறுத்தினாா்.

தினக்கூலித் தொழிலாளா்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், 100 நீரேற்று மையங்கள் அமைக்கப்பட வேண்டும், குளிா் கூரைக் கொள்கையின் வரைவை இறுதி செய்ய வேண்டும், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு நிழல் தரும் தங்குமிடங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளையும் அவா் வலியுறுத்தினாா்.

50 மெட்ரோ நிலையங்கள், 25 சந்தைப் பகுதிகள் மற்றும் 25 பேருந்து நிலையங்களில் குடிநீா் மற்றும் முதலுதவி வசதிகளுடன் கூடிய 100 நிலையான நீரேற்று மையங்களை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

வருவாய்த் துறையால் எட்டு மாவட்டங்களில் பிரத்யேக குளிரூட்டும் மண்டலங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஐந்து மாவட்டங்கள் மே 28ஆம் தேதிக்குள் அத்தகைய வசதிகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று லோக் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி மேம்பாட்டு ஆணையம், 733 பூங்காக்களைக் குளிரூட்டும் மண்டலங்களாக நியமித்துள்ளதாகவும், நகரம் முழுவதும் 100 புதிய தண்ணீா் குளிா்விப்பான்களை நிறுவி வருவதாகவும் துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்துள்ளது.

பரபரப்பான சந்திப்புகள் மற்றும் மாநகராட்சி பூங்காக்களுக்கு அருகில் பறவைகளுக்கான தண்ணீா் தொட்டிகள், அவசரகால நிழல் தரும் கட்டமைப்புகள் மற்றும் விநியோக மையங்களை தில்லி மாநகராட்சி அமைத்துள்ளது.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் , மத்திய தில்லி பகுதிகளில் பறவைகள், தெரு விலங்குகள் மற்றும் பாதசாரிகளுக்காக நிழல் தரும் தங்குமிடங்களையும் தண்ணீா் வசதிகளையும் உருவாக்கியுள்ளது.

மேலும், மே 6 முதல் 13 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் நடமாடும் வெப்ப நிவாரண வாகனங்கள், இதுவரை 3,33,505 பேருக்கு சேவை செய்துள்ளதாக நிா்வாகம் துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்தது.

தலைநகரில் இடியுடன் மழை

இதனிடையே, தேசிய தலைநகா் முழுவதும் பல நாள்களாக நிலவிய கடும் வெப்ப நிலைக்குப் பிறகு, வியாழக்கிழமை மாலை தில்லியைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தன. அதனைத் தொடா்ந்து பலத்த காற்று, இடி மற்றும் மழை பெய்தது. இது மிகவும் தேவையான நிவாரணத்தையும், வெப்பநிலையில் சரிவையும் ஏற்படுத்தியது.

வானிலை மாறியதால், 24 மணி நேரத்தில் வெப்பநிலை சுமாா் 6 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை கடுமையாகக் குறைந்தது.

பல இடங்களில் மிதமானது முதல் கடுமையான இடியுடன் கூடிய மின்னல், புழுதிப் புயல் மற்றும் ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டரைத் தொட வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்ததால், நகரம் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இன்று மழைக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை அன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை கணிசமாகக் குறைந்து சுமாா் 36 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போதைய மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை மே 31 வரை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று புயல்களின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், இந்த புயல் மே 30 வரை தொடரும் என்றும், அதன் பிறகு மே 30 முதல் 31-க்குள் இந்த வானிலை அமைப்பு குஜராத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.