முகப்பு
நூல் அரங்கம்

பாரதி: தாக்கமும் தாக்கும்

பாரதி அன்பர்கள் கட்டாயம் தங்கள் புத்தக சேகரிப்பில் வைத்திருக்க வேண்டிய நூல் இதுவாகும்.

Updated On : 1 ஜூன் 2026, 3:24 pm IST
பகிர்:

பாரதி: தாக்கமும் தாக்கும்-சுகுமாரன், பக்.120; ரூ.130; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 050, ✆ 044-2625 1968.

பாரதி வாழ்ந்த காலத்தில் அவரைப் பெரும் கவிஞர் என்று ஏற்றுக் கொண்டவர்கள் மிகச் சிலரே. அவர் மறைந்த பின்பும் அவரை பெரிய கவி என்று ஏற்கத் தயங்கினார்கள்.

தமிழ் கவிதைத் திறன் பல நூற்றாண்டுகளாக வீழ்ச்சி அடைந்து புதர் மண்டிக் கிடந்தது. அதை சுத்தம் செய்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியது பாரதியார். நவீன தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனை அவரே.

Advertisement

Advertisement

இது பற்றிய விழிப்புணர்வை அக்காலத்திய இலக்கியகர்த்தாக்கள் இடையில் ஏற்படுத்துவதே பெரும் போராட்டமாக இருந்தது.

அவரை தேசிய கவியாக ஏற்கலாம்; ஆனால், மகாகவியாக ஏற்க முடியாது என்று கல்கி போன்றவர்கள் கூறி வந்தார்கள். இந்த வெகுஜன பிம்பத்தை உடைக்க ஒரு பெரும் இயக்கம் அன்று தேவைப்பட்டது.

அதன் விளைவாக பாரதி மகாகவிதான் என்று தமிழ் சமூகம் ஏற்றாலும், ஜாதி அதிகார அரசியல் ஆதிக்கம் செலுத்தும் தற்காலத்திலும் பாரதியை அந்த பீடத்தில் இருந்து இறக்கிவிட சில குழுக்கள் முயன்று வருகின்றன என்பது துரதிருஷ்டவசமானதும் அறிவின்மையும் ஆகும். அதை உடைத்தெறியவே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரதி என்ற மானிடனும் அவனுடைய எழுத்தும் ஏற்படுத்திய தாக்கமும் எதிர்கொண்ட தாக்குதல்களும் வரிசைப்படுத்தப்பட்டு, தக்க வாதங்களையும் மறுதலிப்புகளையும் இந்த நூல் முன் வைக்கிறது.

பாரதியார் போதிய அளவு முற்போக்காளர் அல்ல என்ற வாதத்துக்குப் பதிலடியாக, தனது பக்தி பாடல்களிலும் தேச நலன், மக்கள் நலனையே அவர் வேண்டியுள்ளார் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் இந்நூல் விளக்குகிறது.

ஜாதி பிரிவினைகளை எழுத்திலும் செயலிலும் எதிர்த்தவர் பாரதி. பொதுவுடைமை, புரட்சி ஆகிய சொற்களை உருவாக்கியவர் பாரதியார். அவர் உள்ளத்தை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.

பாரதி அன்பர்கள் கட்டாயம் தங்கள் புத்தக சேகரிப்பில் வைத்திருக்க வேண்டிய நூல் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.