சிற்பி கவிதைகள்
கவிஞர் சிற்பியின் அகவை தொண்ணூறையொட்டி, அத்தனைக் கவிதைத் தொகுப்புகளையும் ஒன்றாகத் திரட்டி மூன்று பாகங்களாக வெளியிட முற்பட்டிருக்கிறார் கிருங்கை சேதுபதி.
சிற்பி கவிதைகள் - தொகுப்பு கிருங்கை சேதுபதி, தொகுதி 1; பக். 852; ரூ. 1,000; தொகுதி 2; பக். 780; ரூ. 950; தொகுதி 3; பக். 840; ரூ. 1,000; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 050, ✆ 044-2635 9906.
தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர் சிற்பி என்பது உலகறிந்த உண்மை. பாவேந்தர் பாரதிதாசனால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர் அவர். மொழிபெயர்ப்புக்காகவும், கவிதைக்காகவும் இரண்டு முறை சாகித்திய அகாதெமியின் விருது பெற்றவர். அவரது படைப்புகள் அனைத்தும் மூன்று பாகங்களாகத் தொகுத்து வெளிவந்திருக்கின்றன.
1963-இல் வெளிவந்த 'நிலவுப்பூ' என்கிற தொகுப்பில் தொடங்கி, 2025-ஆம் ஆண்டில் வெளிவந்த "கிரண ஊர்வலம்' வரை அவரது கவிதைகளைத் தாங்கி வந்த தொகுப்புகள் ஏராளம். தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு அவற்றை வெளியிட்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் தனித்தனியாக அடுக்கி வைத்தாலே, அதற்கென்று நூலகத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
கவிஞர் சிற்பியின் அகவை தொண்ணூறையொட்டி, அத்தனைக் கவிதைத் தொகுப்புகளையும் ஒன்றாகத் திரட்டி மூன்று பாகங்களாக வெளியிட முற்பட்டிருக்கிறார் கிருங்கை சேதுபதி.
2011-ஆம் ஆண்டு ஏற்கெனவே வெளிவந்திருந்த கவிஞர் சிற்பியின் 17 தொகுப்புகளும், கவிஞர் நவபாரதியின் அணிந்துரையுடன் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன. இப்போது வெளிவந்திருப்பது அதன் நீட்சியாக மூன்று தொகுதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு.
முதல் தொகுப்பில் தொகுப்பாசிரியர் முன்னுரை, கவிஞர் சிற்பியின் தன்னுரை, தோழர் நவபாரதியின் அணிந்துரை இடம்பெறுகிறது என்றால், தனித் தனியாக வெளிவந்த கவிஞர் சிற்பியின் தொகுப்புகளின் முன்னுரைகளும், அணிந்துரைகளும் பின்னிணைப்பாகத் தரப்பெற்றிருக்கின்றன. கவிஞர் சிற்பியின் 'கருணைக் கடல் இராமாநுசர்' மட்டும் இணைக்கப்படவில்லை.
"ஒரு நீண்ட பயணத்தின் அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றன இந்தக் கவிதைத் தொகுதிகள். ஓரளவுக்கு நாட்டின் வரலாற்றையும், பேரளவுக்கு என் படைப்பில் விளைந்த மாற்றங்களையும் இவை புலப்படுத்தும்'' என்கிற கவிஞர் சிற்பியின் அணிந்துரை வரிகளைவிட, இந்தத் தொகுப்பு குறித்துச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது!