முகப்பு
நூல் அரங்கம்

மாணவனே, மாணவியே! நீ தலைவன் ஆகணும்!

சமூக ஊடகங்கள், போதை கலாசாரம் போன்றவற்றில் இருந்து இளம்தலைமுறையினர் தங்களைக் காத்துக் கொண்டு, ஆன்மிக, சமூகரீதியாக முன்னேற உதவும் நூல் இது.

Updated On : 15 ஜூன் 2026, 6:00 pm IST
பகிர்:

மாணவனே, மாணவியே! நீ தலைவன் ஆகணும்!- சுவாமி விமூர்த்தானந்தர்; பக். 272; ரூ. 250; வானதி பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044- 2434 2810.

தமிழ்நாட்டின் நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள இந்தக் கால 'ஜென் இஸட்' தலைமுறையினர், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து வந்த கேள்விகளுக்கு சுவாமி விமூர்த்தானந்தர் அளித்த பதில்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பத்திரிகையான ஸ்ரீராம கிருஷ்ண விஜயத்தில் வெளிவந்தவை. அவை தொகுக்கப்பட்டு புத்தகமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

சோதித்து அறிந்த அறிவியல் தகவல்கள், சுவையான குட்டிக் கதைகள், பொருத்தமான மேற்கோள்கள் முதலியவற்றை நூலாசிரியர் இயல்பாகப் பயன்படுத்தி ஈர்க்கிறார். கணினியின் செயல்பாடுகள், சமூக ஊடகங்கள், சிலேடைகள், புதுக் கவிதைகள் போன்றவற்றை பதில்களில் பொருத்தமாகப் பயன்படுத்தி வியக்க வைக்கிறார்.

Advertisement

Advertisement

ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்கள் ஊக்கமூட்டுபவையாக உள்ளன.

சகோதரி நிவேதிதை, சுவாமி கங்கானந்தர், சுவாமி ரங்கநாதானந்தர், சுவாமி சஹஜானந்தர், பாலகங்காதர திலகர், நேதாஜி, யதீஸ்வரி சாரதாப்ரியாம்பா, அப்துல் கலாம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோரின் வாழ்க்கை சம்பவங்களும், செவிலியர் நிர்மலா பால்சாமி, சேவாலயா முரளி ஆகியோரின் தொண்டு குறித்த தகவல்களும் மாணவர்களுக்கு கலங்கரை விளக்கம் ஆகும்.

மாற்றுத்திறனாளிகளான சபரி, செல்வி ஆர்த்தி ஆகியோரைப் பற்றிய தகவல்கள் நெஞ்சைத் தொடுகின்றன.

தெப்போற்சவம், நடிகரின் விமர்சனங்கள், தெய்வ சிலைகள் உடைத்தல் போன்றவற்றுக்கு அவர் அளிக்கும் பதில்கள் கவனத்தை ஈர்க்கின்றன. உடல் கவர்ச்சி குறித்து குத்துச்சண்டை வீரர் முகமது அலி - மகள் உரையாடல் சிந்தனையைத் தூண்டவல்லது.

சமூக ஊடகங்கள், போதை கலாசாரம் போன்றவற்றில் இருந்து இளம்தலைமுறையினர் தங்களைக் காத்துக் கொண்டு, ஆன்மிக, சமூகரீதியாக முன்னேற உதவும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.