முகப்பு
ஆன்மிகம்

சங்கரன்கோவிலில் இன்று ஆடித் தவசுக் காட்சி

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தவசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி திங்கள்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது.

Updated On : 21 ஜூலை 2013, 9:45 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித் தவசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி திங்கள்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இக் கோவிலில் ஆடித் தவசு திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. கோவிலிலும், மண்டகப்படியிலும் கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, காலையில் மூலஸ்தானம் சுவாமி, அம்பாளுக்கு கும்பம் அபிஷேகம் நடைபெறும். பின்னர், முற்பகல் 11.45 மணிக்கு அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்துக்குச் செல்வார்.

Advertisement

Advertisement

அதேநேரம், சுவாமிக்கு காலையில் பட்டுப் பரிவட்டம், அலங்காரத்துக்குரிய பொருள்கள் சகிதம் மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்குதல், மூலஸ்தானம் சுவாமி, அம்பாள், சந்திரமெüலீஸ்வரருக்கு கும்பம் அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தொடர்ந்து, சுவாமி மாலையில் கோவிலிலிருந்து புறப்பட்டு, தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டுள்ள தவசுப் பந்தலுக்கு வருவார். அப்போது, தவசு மண்டபத்திலிருந்து அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி எதிர்ப்பந்தலுக்கு வருவார்.

மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சியளிப்பார். இரவு 11 மணிக்கு சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சியளிப்பார்.

பக்தர்கள் குவிந்தனர்: இந் நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமையே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.