மாநிலக் கல்லூரியின் முதல் கண்பார்வையற்ற தமிழ்த்துறை தலைவர்!
175 வருட பாரம்பரியம் மிக்க மாநிலக் கல்லூரியில் முதல் முறையாக கண்பார்வையற்ற ஒருவர் தமிழ்த்துறை தலைவராக
175 வருட பாரம்பரியம் மிக்க மாநிலக் கல்லூரியில் முதல் முறையாக கண்பார்வையற்ற ஒருவர் தமிழ்த்துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தான் டாக்டர் ஆர்.ஜெயச்சந்திரன்.
முப்பது வருடங்களுக்கு முன்னால் கடற்கரைச் சாலையில் உண்ணாவிரதம் இருந்து பெற்ற முதல் வேலையிலிருந்து இன்று வரை அவருடைய பயணம் போராட்டக் களமாகத்தான் உள்ளது.
ஜெயந்திரனின் வாழ்க்கையில் இப்படி நிறைய ‘முதல்’ கள் உண்டு. விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் தான் அவர் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி. உலக அளவில் பார்வையற்ற ஒருவர் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதில் இவர் தான் முதல். கடந்த வருடம் மாநிலக் கல்லூரியில் தமிழ்துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்தக் கல்லூரியின் 175 வருட சரித்திரத்தில் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது.
Advertisement
நூற்றாண்டைத் தாண்டிய பழமையான அறை அது. 1856-ஆம் ஆண்டு கட்டப்பட்டப்பட்ட போது எப்படி வடிவமைக்கப்பட்டதோ அதே நிலையில் அதே இருக்கைகளுடன் பழமை துளியும் மாறாத அந்த அறையில் தன்னுடைய உதவியாளரிடம் குறிப்புகளை தந்துக் கொண்டிருந்தார் ஜெயச்சந்திரன். 53 வயதான ஜெயச்சந்திரன் புன்னகையுடன் ‘மூத்த பேராசிரியர் எனும் தகுதியில் தான் எனக்கு இந்தப் பதவியை அளித்துள்ளார்கள்’ என்றார் பணிவுடன். ‘உதவி செய்ய பணியாளர்களோ உதவியாளர்களோ இல்லாத சூழலில் தான் இன்னும் இருக்கிறோம், அதற்கான பண உதவி கிடைப்பதில்லை. நானே என் சொந்த பணத்திலிருந்து தான் செலவு செய்ய வேண்டியுள்ளது’ என்றார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த குமளம் எனும் கிராமத்தில் பிறந்தவர் ஜெயச்சந்திரன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் ஐந்தாம் வகுப்பு வரை கடலூரில் படித்தபின் உயர் கல்வி கற்க பூந்தமல்லியில் உள்ள கண்பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு தான் அவருக்கு பேராசிரியர் ஆகவேண்டும் என்ற கனவு உதித்தது. ‘நான் ஐந்தாவது படிக்கும் போது, எனக்கு கண்பார்வையற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார், எங்களைப் போன்றவர்களுக்கு விதிக்கப்பட்டது இதுதான் போலும் என்று தோன்றியது’. என்றார். கல்லூரி படிப்பை பச்சையப்பன் கல்லூரியில் முடித்த ஜெயச்சந்திரன் அதைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட படிப்பை முடித்தார். முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பார்கோ அவருக்கு ஆசரியராக இருந்தார்.
‘கண்பார்வை இல்லாமல் போனது ஒருவிதத்தில் நல்லதுதான், எங்கள் குறையை இகழ்ச்சியாக பேசுபவர்களைப் பார்க்காமல் இருக்க முடிகிறது. என் சொந்த அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு பேராசிரியர் முதல் பென்ச்சில் நான் உட்கார்ந்திருப்பதைக் கண்டித்து உன்னை இந்த பென்ச்சில் பார்த்தால் கெட்ட சகுனமா தோணுது என்று மனம் நோகும்படி பேசியிருக்கிறார். 1990-ல முதல் வேலை விருத்தாசலம் கொளஞ்சியப்பன் கல்லூரியில். சந்தோஷமாகத் தான் போய் சேர்ந்தேன். ஆனால் பார்வையில்லாதவன்தானே என்று மாணவர்கள் ஏமாற்றுவார்கள், அந்த நாட்களை ஒப்பிடும்போது, இப்போது நிறைய மாற்றங்கள். இங்கு மாநிலக் கல்லூரி மாணவர்கள் நல்லவிதமா நடந்துப்பாங்க, எங்களுக்கு உதவி செய்கிறார்கள். ‘ என்றார்.
2006-ல் சீனப் பெருஞ்சுவர் சென்றுள்ளார் ஜெயச்சந்திரன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது, செய்ய வேண்டிய செயல்களும் மலை அளவு உள்ளது. கண்பார்வையற்ற மாணவர்களுக்கு கணினி கற்றுத் தர வேண்டும் என்று ஆசைப்படும் ஜெயச்சந்திரன் அண்ணா நூலகத்தில் ஒலி மற்றும் ப்ரெய்லிக்காக தனி இடம் ஏற்படுத்தியுள்ளார். ப்ரெய்லியில் கணினி கற்றுத் தருவதில் வல்லுநரான அவர் பல மாணவர்களுக்கு அதில் சிறப்பான பயிற்சி கொடுக்கிகிறார்.
மனைவி வெண்ணிலா ஜூலியட் அரசுப் பள்ளி ஆசிரியை. ஜெயச்சந்திரன் வெண்ணிலா தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.
ஜெயச்சந்திரன் உட்பட மாநிலக் கல்லூரியில் இதுவரை 9 கண்பார்வையற்ற பேராசிரியர்கள் வேலை செய்கிறார்கள்.
தமிழ்த்துறையில் மொத்தம் உள்ள 22 பேராசிரியர்களுள் 5 பேர் பார்வையற்றவர்கள்.
இதே போல் ஆங்கிலத்துறையில் 3 பேராசிரியர்களும், சரித்திரத்துறையில் ஒருவரும் பணியில் உள்ளனர்.
(தமிழில் உமா ஷக்தி)