ஐபிஎல்: இன்று கோலாகல தொடக்கம்
ஆறாவது ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா கோலாகல கொண்டாட்டத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
ஆறாவது ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா கோலாகல கொண்டாட்டத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், காத்ரினா கைஃப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் சீன இசை வாசிக்கப்பட உள்ளது. ரசிகர்களைக் கவரும் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட உள்ளன.
Advertisement
தொடக்க நிகழ்ச்சி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கூறுகையில், "இதுபோன்ற தொடக்க நிகழ்ச்சிகளை இதுவரை இந்தியாவில் எங்கும் கண்டிருக்க முடியாது. அந்த அளவு சிறப்பாக இருக்கும்' என்றார்.
இப்போட்டியில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஐபிஎல் போட்டியில் பட்டம் வெல்ல வேண்டும் என்று அனைத்து அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்புச் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தொடக்கப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றது. புதன்கிழமை நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டெக்கன் சார்ஜர்ஸ் அணி, இம்முறை சன் ரைசர்ஸ் அணி என்ற பெயரில் புதிய நிர்வாகத்தின் கீழ் களமிறங்குகிறது.
ஐபிஎல் போட்டியின் இரு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வலுவான அணியாகத் திகழ்கிறது. அணியில் கேப்டன் தோனி, அஸ்வின், முரளி விஜய், ரெய்னா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்த அணியில் இருந்த வீரர்கள், சென்னை அணியில் இடம் பிடித்துள்ளதால் அந்த அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் இங்கிலாந்தின் பீட்டர்சன் மற்றும் நியூஸிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முதல் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த ஆண்டைப் போலவே ராகுல் திராவிட் தலைமையில் களமிறங்குகிறது. ராஜஸ்தான் அணிக்கு கடந்த ஆண்டு மிக மோசமானதாக அமைந்தது. அதனால், இம்முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த அணியில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் இடம் பெற்றிருப்பது பலமாகும். சிறந்த வீரர்களை உள்ளிடக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கெயில், இலங்கையின் முரளிதரன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், டேரன் லீமேன், பாகிஸ்தானின் அசார் முகமது, டேவிட் ஹசி மற்றும் ரியான் ஹாரிஸ் உள்ளிட்ட திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக விளையாடி வரும் புணே வாரியர்ஸ் அணி, இலங்கை வீரர் மேத்யூஸ் தலைமையில் களமிறங்குகிறது. புற்று நோய் சிகிச்சை எடுத்துக் கொண்டதால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடாத யுவராஜ் இப்போட்டியில் களமிறங்குவது புணே வாரியர்ஸýக்கு பலமாகும்.
மும்பை இண்டியன்ஸ் அணியில் சச்சின், ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா, ஜேக்கப் ஓரம், பொல்லார்டு, பில் ஹியூஸ் உள்ளிட்ட பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இம்முறை கோப்பையைக் கைப்பற்றுவோம் என்று சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளது அணி வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆறாவது ஐபிஎல் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ. 25 கோடியாகும். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 7.5 கோடியும் அளிக்கப்படும்.