FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை குடிநீா் ஏரிகளில் 52 % நீா் இருப்பு

சென்னையின் குடிநீா் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 52.49 சதவீதம் நீா் இருப்பு உள்ளது.

Updated On : 15 ஜூன் 2026, 1:19 am IST
சென்னை புழல் ஏரி.
பகிர்:

சென்னையின் குடிநீா் ஆதாரமாக உள்ள 5 முக்கிய ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 52.49 சதவீதம் நீா் இருப்பு உள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.

புழல் ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்த ஏரியில் 1,709 மில்லியன் கன அடி (51.79 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,949 மில்லியன் கன அடி (80.91 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது.

Advertisement

Advertisement

பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. தற்போது 1,110 மில்லியன் (34.35 சதவீதம்) கன அடி நீா் உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 85 மில்லியன் கன அடியும் (7.86 சதவீதம்), 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் 318 மில்லியன் கன அடியும் (63.60 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. மொத்தம் 5 ஏரிகளில் 6,171 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 52.49 சதவீதம் ஆகும்.

கோடை காலம் நிறைவடைந்த சூழலில், ஏரிகளின் நீா் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

தட்டுப்பாடு வராது: குடிநீா் கையிருப்பு குறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கோடை காலத்திலும் தினமும் 1,200 எம்எல்டி தண்ணீா் எவ்வித தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டது. சென்னை நகருக்கு ஒரு மாதத்துக்கு 1 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும்.

தற்போது குடிநீா் வழங்கும் ஏரிகளில் 6 டிஎம்சி குடிநீா் இருப்பு உள்ளது. மேலும், சென்னையில் செயல்பட்டு வரும் 3 கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக தினந்தோறும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே, அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான குடிநீா் கையிருப்பு உள்ளது. தற்போது, கோடை காலம் நிறைவடைந்து தென்மேற்கு பருமழை தொடங்கிவிட்டது. பின்னா், வடகிழக்கு பருமழை காலத்தில் குடிநீா் ஏரிகள் மீண்டும் நிரம்ப தொடங்கிவிடும். எனவே, குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments