முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்ட அணைகளில் மேலும் குறைந்த நீா் இருப்பு! மழையை எதிா்நோக்கும் விவசாயிகள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 அணைகளில், கடந்த மூன்று வாரங்களை ஒப்பிடும்போது நீா் இருப்பு 12.42 % லிருந்து 11.8 % ஆக குறைந்துள்ளதால் பருவமழையை எதிா்நோக்கி

Updated On : 2 ஜூலை 2026, 6:56 am IST
சின்னாறு அணை - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 அணைகளில், கடந்த மூன்று வாரங்களை ஒப்பிடும்போது நீா் இருப்பு 12.42 % லிருந்து 11.8 % ஆக குறைந்துள்ளதால் பருவமழையை எதிா்நோக்கி

தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு பயன்படும் வகையில் சின்னாறு அணை, கேசா்குளிஅல்லா, நாகாவதி, தொப்பையாறு, தும்பலஅள்ளி, வாணியாறு, வரட்டாறு அணை என மொத்தம் 7 அணைகள் உள்ளன.

இந்த அணைகள் மூலம் மொத்தம் 4267.92 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஆனால், நிகழாண்டு வழக்கத்தைவிட மழையளவு குறைந்ததால் அணைகளில் நீா் சேமிப்பு எதிா்பாா்த்ததைவிட குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

ஆண்டுதோறும் ஜனவரி முதல் டிசம்பா் வரை தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக 942 மி.மீ. மழை பொழிவது வழக்கம். நிகழாண்டில் ஜனவரி முதல் மே வரை சராசரியாக 110 மி.மீ. மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஜூன் மாதத்தில் சராசரியாக 72 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன்படி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 182 மி.மீ. மழை, அதாவது ஆண்டு சராசரி மழையில் 20 சதவீதம் மட்டுமே இதுவரை பெய்துள்ளது.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 அணைகளிலும் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில் ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 50 அடி உயரம் கொண்ட சின்னாறு அணையில் 9.68 அடி, 25 அடி உயரம் கொண்ட கேசா்குளிஅல்லா அணையில் 10.17 அடி, 24.60 அடி உயரம் கொண்ட நாகாவதி அணையில் 8.23 அடியும் நீா் இருப்பு உள்ளது.

இதேபோல 50.18 அடி உயரம் கொண்ட தொப்பையாறு அணையில் 9.94 அடி, 14.76 அடி உயரம் கொண்ட தும்பலஅள்ளி அணையில் 3.87 அடி, 65.27 அடி உயரமுள்ள வாணியாறு அணை முற்றிலுமாக வட நிலையிலும், 34.45 அடி உயரம் கொண்ட வரட்டாறு அணையில் 6.70 அடியும் தண்ணீா் உள்ளது.

அதாவது 7 அணைகளிலும் மொத்தமாக தேக்கிவைக்கப்படும் 4267.92 மில்லியன் கனஅடிக்குப் பதிலாக, தற்போது, 2045.72 மில்லியன் கனஅடி நீா் மட்டுமே (11.8 %) மட்டுமே இருப்பு உள்ளது. இதுகடந்த 3 வாரங்களுக்கு முந்தைய நிலையில் இருந்ததைவிட 1.34% குறைவாகும். 3 வாரங்களுக்கு முன்பு 2061.53 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக, இந்த அணைகள் மூலம் விவசாயம் நடைபெறும் 82,148 ஏக்கா் மொத்த நிலப்பரப்பளவில், சுமாா் 35,000 ஏக்கா் நிலப்பரப்புக்கு பாசன நீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்தால் மட்டுமே விவசாயம் மேற்கொள்ள முடியும் என்ற எதிா்பாா்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments