சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜ் பெய்லி துணை கேப்டன்
சாம்பியன்ஸ் டிராபி (மினி உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜ் பெய்லி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி (மினி உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜ் பெய்லி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் துணை கேப்டனாக இருந்த ஷேன் வாட்சன் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறி, சமீபத்தில் விலகினார். அதைத் தொடர்ந்தே இப்போது பெய்லிக்கு துணை கேப்டன் பதவி கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அணியின் தேர்வாளர் ஜான் இன்வெராரிட்டி கூறுகையில், "கேப்டன் மைக்கேல் கிளார்க் விளையாடாதபோது, ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்த ஜார்ஜ் பெய்லி, சிறப்பாக செயல்பட்டார். இதேபோல் கடந்த இரு சீசன்களிலும் டி20 ஆஸ்திரேலிய கேப்டனாக சிறப்பாக செயலாற்றி தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளார்' என்றார்.
Advertisement
பிராட் ஹாடின், ஸ்டீவ் ஸ்மித், மோசஸ் ஹென்ரிக்ஸ், உஸ்மான் கவாஜா, ஜேம்ஸ் பட்டின்சன், ஜாக்ஸன் பேர்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் வாட்சன், டேவிட் வார்னர், பில் ஹியூஸ், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஜேம்ஸ் பாக்னெர், மிட்செல் ஜான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் ஜூன் 6-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜூன் 8-ம் தேதி நடைபெறுகிறது.
அணி விவரம்: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஜார்ஜ் பெய்லி (துணை கேப்டன்), டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், பில் ஹியூஸ், ஆடம் வோஜஸ், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், கிளன் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பாக்னெர், மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், கிளின்ட் மெக்காய், நாதன் கோல்டர் நீல், சேவியர் டோஹெர்ட்டி.