முகப்பு
கிரிக்கெட்

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

இனி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது என அந்த அணி வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

Updated On : 21 ஏப்ரல் 2026, 4:40 pm IST
மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

இனி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது என அந்த அணி வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். அவர் 45 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் இனிவரும் போட்டிகளில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது என திலக் வர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இந்த வெற்றி அணிக்கும், எனக்கும் மிகவும் முக்கியமானது. அதிக பந்துகளை சந்திக்காமல் விரைவில் ஆட்டமிழந்துவிடுகிறோம் என்பது கடந்த ஐந்து ஆட்டங்களாக என்னுடைய மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அதனால், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என எண்ணினேன்.

மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாதில் விளையாடும்போதெல்லாம், எங்களுக்கு கருப்பு மண் ஆடுகளமே வழங்கப்படும். சற்று மெதுவாக இருப்பதே அந்த ஆடுகளத்தின் இயல்பு. இதனால் அந்த ஆடுகளத்துக்கு தகுந்தவாறு எங்களது வீரர்கள் விளையாடமாட்டார்கள் எனக் கிடையாது. ஆடுகளத்தின் தன்மைக்கேற்றவாறு நாங்கள் விளையாடினோம். ஆடுகளம் மெதுவாக இருந்ததால், நேராக ஷாட்டுகளை விளையாட முடிவு செய்து விளையாடினேன். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடியதால் ரன்களும் எடுக்க முடிந்தது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அதன் பின் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

மும்பை அணி நாளை மறுநாள் (ஏப்ரல் 23) வான்கடே திடலில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

summary

Mumbai Indians player Tilak Varma has stated that the team's victory can no longer be stopped.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.