முகப்பு
செய்திகள்

மெல்போர்ன் டெஸ்ட்: தொடக்க வீரர்கள் ராகுல்-முரளி விஜய் நீக்கம்

பாக்ஸிங் டே எனப்படும் மெல்போர்ன் டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய்-கே.எல்.ராகுல்

Updated On : 26 டிசம்பர் 2018, 2:53 am IST
மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டம் தொடங்கும் நிலையில் செவ்வாய்க்கிழமை மைதானத்தில் பயிற்சியின் போது சந்தித்துக் கொண்ட கேப்டன்கள் விராட் கோலி-டிம் பெய்ன்.
பகிர்:

* மயங்க் அகர்வால்-விஹாரி களமிறங்குவர்
 

பாக்ஸிங் டே எனப்படும் மெல்போர்ன் டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய்-கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால்-ஹனுமா விஹாரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸி. 146 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றிருந்தன.
4 ஆட்டங்கள் கொண்ட இத்தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் ஆட்டமாக மெல்போர்ன் டெஸ்ட் உள்ளதால், இதில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக உள்ளனர்.
கேப்டன் கோலி தலைமையில் இந்திய அணியினர் திங்கள்கிழமை முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அணி நிர்வாகத்துக்கு முக்கிய கவலையே ராகுல்-முரளி விஜய் உள்ளிட்ட தொடக்க வீரர்கள் சரிவர ஆடாமல் உள்ளதாகும். கடந்த அடிலெய்ட், பெர்த் டெஸ்ட்களில் இருவரும் சேர்ந்து வெறும் 95 ரன்களை மட்டுமே சேர்த்தனர். இதனால் விராட் கோலி-சேதேஸ்வர் புஜாரா ஆகியோர் மீது சுமை ஏற்பட்டது.
ரன்கள் எடுக்கத் தவறியதால் ராகுல்-முரளி விஜய் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் மயங்க் அகர்வால்-ஹனுமா விஹாரி களமிறக்கப்படலாம். காயமுற்றிருந்த ரோஹித் சர்மாவும் குணமடைந்து களமிறங்குகிறார்.


அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா:
அடிவயிறு உபாதையால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்வின் ரவிச்சந்திரன் அணியில் இடம் பெறாத நிலையில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் ரஹானேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இந்திய அணி உற்சாகமாக உள்ளது.
அணி விவரம்-விராட் கோலி (கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷப்பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா.
ஆஸி. அணியில் மிச்செல் மார்ஷ்: ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் மிச்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நீக்கப்பட்டுள்ளார். 
ஆஸி. அணி-டிம் பெய்ன் (கேப்டன்), மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், ஜோஷ் ஹேஸல்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன், மிட்டெஸ்,,ஸ்டார்க்.

Advertisement

Advertisement

பெளலர்களுக்கு உதவும் வகையில் பேட்ஸ்மேன்கள் ஆட வேண்டும்: கேப்டன் விராட் கோலி
பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். ஆனால் பேட்டிங் சோபிக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவித்தால் தான் பெளலர்களுக்கு உதவியாக இருக்கும். மெல்போர்னில் புதிய உத்வேகத்துடன் களமிறங்குறோம். முந்தைய ஆட்டத்தில் தோல்வி என்பதை மறந்து விட வேண்டும். நடக்கவுள்ள ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். பெர்த் டெஸ்ட்டைப் போல் கேப்டன் பெய்னுடன் மோதலை எதிர்பார்க்க வில்லை. இரு அணிகளும் வெற்றிக்காக போராடும். எந்த செயலும் வரம்பை மீறாமல் இருந்தால் நல்லது. இருவரும் அணிகளை வழிநடத்தி சிறப்பாக ஆடச் செய்ய வேண்டும் என ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். மெல்போர்ன் ஆட்டத்தில் நல்ல முடிவு கிடைக்கும். பிட்ச் முழுவதும் புற்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பிட்சில் முந்தைய தொடரில் எந்த அணிக்கும் முடிவு கிடைக்கவில்லை. இந்த முறைபிட்ச் உயிரோட்டமாக இருக்கும் என எண்ணுகிறேன். தொடர்ந்து பிட்சின் தன்மைக்கு ஏற்ப எங்கள் உத்திகளை வகுத்து செயல்படுவோம் என்றார் கோலி. 
டிம் பெய்ன்: ஹேண்ட்ஸ்கோம்ப் 4 இன்னிங்ஸ்களிலும் சீராக ஆடவில்லை. அணியில் இருந்து வீரரை நீக்க வேண்டும் என்பது சரியான செயல் இல்லை. நீண்ட காலம் ஆடும் தொடரின் போது இதுபோன்று நடைபெறுவது சகஜம். எங்கள் பெளலர்களுக்கு கடும் பணிச்சுமை காத்திருக்கிறது. மிச்செல் மார்ஷ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.

சேவாக் ஆட்டத்தை மயங்க்கிடம் எதிர்பார்க்கிறோம்
பெங்களூரு, டிச. 25: சேவாக் ஆட்டத்தை மயங்க் அகர்வாலிடம் எதிர்பார்க்கிறோம் என அவரது பயிற்சியாளர் இர்பான் சேட் கூறியுள்ளார்.
மெல்போர்ன் டெஸ்ட் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அறிமுகத்திலேயே தொடக்க வீரராக களமிறங்குகிறார். இந்நிலையில் அவரது பயிற்சியாளர் இர்பான் கூறியதாவது:
வீரேந்திர சேவாக்கைப் போன்ற தன்மைகள் அனைத்தும் மயங்க்கிடம் காணப்படுகின்றன. ஆனால் அவரைப் போல் விக்கெட்டை அலட்சியமாக பறிகொடுக்க மாட்டார் அகர்வால்.
மெல்போர்ன் ஆட்டத்தில் சேவாக்கை போல் ஆக்ரோஷமான ஆட்டத்தை அவரிடம் எதிர்பார்த்துள்ளேன். மயங்க் மைதானத்தில் கவனமுடன் தீவிரமாக ஆடும் போக்குடையவர். தொடக்க வீரருக்கான தகுதிகளும்அவரிடம் உள்ளன.

தொடரில் முன்னிலை பெறுமா இந்தியா?
மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டத்தில் வென்று தொடரில் இந்தியா முன்னிலை பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில் முதல் இரண்டு டெஸ்ட்களிலும் பெளலர்கள் அபாரமாக பந்துவீசினர். எனினும் பேட்டிங் தொடர்ந்து கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
சோபிக்காத தொடக்க வரிசை: எனினும் தொடக்க வரிசை சோபிக்காதது இந்தியாவுக்கு பாதகமாக உள்ளது. இதனால் ராகுல்-முரளி விஜய் இணையை நீக்கிவிட்டு, ஹனுமா-மயங்க் அகர்வால் இணையை களமிறக்குகின்றனர். இருவரும் அதிக ரன்களை குவிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து கோலி, புஜாரா, ரஹானே போன்றவர்களும் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி வருகின்றனர். காயமுற்ற ரோஹித் சர்மா முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களிலும் சரிவர ஆடவில்லை. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 6-ஆவது நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கப்படுகிறார். 
பெளலிங்கில் மாற்றம்: பிரதான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவரது இடத்தை நிரப்பும் வகையில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா இடம் பெறுகிறார். வேகப்பந்து வீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சமி, இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர்.
மரபை மீறி அணி அறிவிப்பு: வழக்கமாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தான் இந்திய அணியின் விவரம் அறிவிக்கப்படும். ஆனால் மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டத்துக்காக மரபை மீறி, ஒரு நாள் முன்னதாகவே அணி விவரத்தை வெளியிட்டுள்ளனர். 
உற்சாகத்தில் ஆஸி. அணி: பெர்த் டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலியா களம் காண்கிறது. அதிரடி பேட்ஸ்மேன்கள் ஸ்மித், வார்னர் இல்லாத நிலையிலும் ஆஸி. இந்த வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments