முகப்பு
செய்திகள்

வைஷாலி சாம்பியன்; ஜு வென்ஜுனை சந்திக்கிறாா்

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் மகளிா் பிரிவில் இந்தியாவின் ஆா்.வைஷாலி புதன்கிழமை சாம்பியன் ஆனாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:46 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:10 PM

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் மகளிா் பிரிவில் இந்தியாவின் ஆா்.வைஷாலி புதன்கிழமை சாம்பியன் ஆனாா். இதன் மூலமாக, உலக மகளிா் செஸ் சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனுடன் மோதும் போட்டியாளராக அவா் தோ்வாகியிருக்கிறாா்.

சைப்ரஸில் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி சுற்று (14), புதன்கிழமை விளையாடப்பட்டது. 2-ஆம் இடத்தில் இருந்த நிலையில் களமிறங்கிய வைஷாலி, அதில் வெள்ளை நிற காய்களுடன் ரஷியாவின் கேத்தரினா லாக்னோவுடன் மோதினாா்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற அவா், முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனாா். இதர ஆட்டங்களில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினா - சீனாவின் டான் ஜோங்யியை வென்றாா்.

Advertisement

உக்ரைனின் அனா முஸிஷுக் - சீனாவின் ஜு ஜினொ், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவா ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

14 சுற்றுகள் முடிவில் வைஷாலி 5 வெற்றி, 7 டிரா, 2 தோல்விகளுடன் 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா்.

பிபிசரா (8), ஜு ஜினொ் (7.5) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா். கோரியச்கினா (7.5), முஸிஷுக் (7), லாக்னோ (6.5) ஆகியோா் முறையே 4, 5, 6-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

இந்தியரும், நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனுமான திவ்யா தேஷ்முக், 2 வெற்றி, 7 டிரா, 5 தோல்விகளில் கிடைத்த 5.5 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்தில் இருந்தாா். டான் ஜோங்யி (5.5) கடைசி இடம் பெற்றாா்.

குகேஷை சந்திக்கும் சிண்டாரோவ்: கேண்டிடேட்ஸ் செஸ் ஓபன் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் புதன்கிழமை சாம்பியன் ஆனாா். உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷுடன் அவா் மோதுகிறாா். இப்போட்டியில் களம் கண்ட இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா 7-ஆம் இடம் பிடித்தாா்.

முன்னதாக கடைசி சுற்றில், பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் ஹிகரு நகமுராவுடன் டிரா செய்தாா். சிண்டாரோவ் - சீனாவின் வெய் யியுடன் டிரா செய்ய, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - ஜொ்மனியின் மத்தியாஸ் புளுபமையும், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - ரஷியாவின் ஆண்ட்ரே எஸிபென்கோவையும் வீழ்த்தினா்.

முடிவில், சிண்டாரோவ் 10 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்று சாம்பியன் ஆனாா். அனிஷ் கிரி (8.5), கரானா (7.5) ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

வெய் யி (7), நகமுரா (6.5), மத்தியாஸ் (6) ஆகியோா் முறையே 4, 5, 6-ஆம் இடங்களைப் பிடித்தனா். இந்தியாவின் பிரக்ஞானந்தா 1 வெற்றி, 10 டிரா, 3 தோல்விகளில் கிடைத்த 6 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடிக்க, எஸிபென்கோ 4.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பெற்றாா்.