பிரான்ஸ் வீரர் எம்பாபேவை இனவெறி ரீதியாக விமர்சித்த பராகுவே செனட்டர்..! குவியும் கண்டனங்கள்!
பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாபே மீதான இனவெறி ரீதியான தாக்குதல் நடத்திய பராகுவே செனட்டர் குறித்து...
பிரான்ஸ் கால்பந்து வீரர் கிளியன் எம்பாபேவை பராகுவே நாட்டைச் சேர்ந்த செனட்டர் செலஸ்டே அமரில்லா என்பவர் மிகவும் மோசமான வார்த்தைகளால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பராகுவே செனட்டர் பதிவுக்கு கால்பந்து உலகம் முழுவதுமே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பராகுவே கால்பந்து அணியும் அந்த நாட்டு அரசியல் தலைவர்களுமே இதில் தங்களுக்கு சம்பந்தமில்லை எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியை பிரான்ஸ் அணி 1-0 என வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் பலமுறை மோதிக்கொண்டார்கள். குறிப்பாக எம்பாவே உடன் பலரும் மோதலில் ஈடுபட்டார்கள்.
Advertisement
Advertisement
பெனால்டியில் கோல் அடித்த எம்பாபே மிகவும் உற்சாகமாக கொண்டாடினார். இந்தப் போட்டியில் பராகுவே வீரரை அவர் தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஃபிஃபா அதுபோல எதுவும் நடந்ததாகக் கூறவில்லை. இருப்பினும் இது இரு நாட்டு ரசிகர்களிடையே மிகுந்த சர்ச்சையானது.
போட்டிக்குப் பிறகும் எம்பாபே பேசியது சர்ச்சையானது. எங்களுக்கும் அநாகரிகமான கால்பந்து விளையாடத் தெரியும் எனக் கூறினார்.
போட்டிக்குப் பிறகு பராகுவே நாட்டின் செனட்டர் செலஸ்டே அமரில்லா (61 வயது) என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் எம்பாபே குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளால் இனவெறி தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.
அதில், ‘இந்த முட்டாளுக்கு எழுதக் கூடத் தெரியாது. அம்மாவின் தாய்ப்பாலைக் குடிப்பதற்குப் பதிலாக, தேங்காய் நீரை உறிஞ்சிக்கொண்டிருந்திருப்பார். காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் தன்னை பிரான்ஸாக காட்டிக்கொள்கிறார். போட்டிக்குப் பிறகு பராகுவே வீரர்கள் அவனைக் கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும் என்றார். மேலும் அவர் எம்பாபேவை, ‘கோபமான, அடாவடித்தனமான, இழிவான நபர் என்றும் போட்டி முழுவதும் பதற்றத்துடன் கோல் அடிக்க முடியாமல் இருந்தார். கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக பெனால்டியில் அவர்கள் வென்றார்கள் என்றார்.
சமூக வலைதளங்களில் இந்தப் பதிவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே அவர் பதிவை நீக்கியுள்ளார். இதற்கு எம்பாப்வேவும் பதிலடி அளித்துள்ளார்.
யார் இந்த செலஸ்டே அமரில்லா?
பராகுவேவின் முன்னணி எதிர்க்கட்சியின் செனட் உறுப்பினர் அமரில்லா 1964ல் பிறந்தவர். பிஎல்ஆர்ஏ கட்சியின் தேசிய செனட்டாராக பதவியேற்றுள்ளார். முன்னதாக, 2018 - 2023 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.
61 வயதான அமரில்லா, 1982 முதல் பிஎல்ஆர்ஏ கட்சியில் இருக்கிறார். அந்தக் கட்சியின் யூத் விங்கிலும் பங்கேற்றுள்ளார். எம்பாபே மட்டுமல்லாமல் தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 2020ல் 60 நாள்கள் ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Celeste Amarilla: The Paraguayan leader who triggered a diplomatic spat with racist remarks against Kylian Mbappe
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.