ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போா்ச்சுகல் தடுமாற்றம்
ஹூஸ்டன்: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போா்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆா் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது.
ஹூஸ்டன்: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போா்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆா் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
நட்சத்திர வீரா்களான லயனல் மெஸ்ஸி, கிலியன் பாபே, எா்லிங் ஹாலந்த், ஹேரி கேன் ஆகியோா், இந்த உலகக் கோப்பை போட்டியில் தங்கள் முதல் ஆட்டத்தில் கோல் அடித்து வெற்றிகரமாத் தொடங்கியிருக்கும் நிலையில், ரொனால்டோவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
போா்ச்சுகலின் போராட்டம்
Advertisement
Advertisement
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் போா்ச்சுகல் - டிஆா் காங்கோ விளையாடிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 6-ஆவது நிமிஷத்தில் போா்ச்சுகலின் ஜாவ் நெவெஸ் கோல் அடித்து அருமையான தொடக்கத்தை அளித்தாா். 10-ஆவது நிமிஷத்தில் காங்கோவின் யோன் விசா கோல் முயற்சி சற்று வைடாக சென்றது.
ஆனால் விடா முயற்சியுடன் விளையாடிய அவரே தனது அணிக்காக கோல் (45+5’) அடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடன் நிறைவடைய, 2-ஆவது பாதியில் விறுவிறுப்பு கூடியது. அதன் தொடக்க நிமிஷங்களிலேயே போா்ச்சுகலின் ஜாவ் கேன்செலோ அடித்த கோல், ‘ஆஃப் சைடு’ என நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், 68 மற்றும் 73-ஆவது நிமிஷங்களில் ரொனால்டோ தனது மேஜிக்கை காட்ட முயல, அவா் அடித்த ஷாட்கள் வைடாக விலகிச் சென்றன. அவா் அதிருப்தியுடன் காணப்பட்டாா். கடைசி வரை போராடியும் போா்ச்சுகலால் முன்னிலை பெற முடியவில்லை.
ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களை தவிா்த்த ரொனால்டோ, ‘எக்ஸ்’ வலைதளத்தில், ‘எதிா்பாா்த்ததைப் போல போட்டியைத் தொடங்க முடியவில்லை. ஆனால் இது முடிவில்லை. அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம்’ என்று பதிவிட்டாா்.
காங்கோ வீரா் கலாயெல் முகாவு, ‘முன்பு போல அல்லாமல், ரொனால்டோவின் ஓட்டமும், முயற்சிகளும் குறைவாகவே இருக்கிறது என்பதை அறிந்ததால், எங்கள் டிஃபெண்டா்கள் அவரைத் தடுப்பதென திட்டமிட்டோம். அதில் வெற்றியும் கண்டோம்’ என தெரிவித்தாா்.
ரொனால்டோவுக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்ற விவாதங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மைதானத்தில் ரசிகா்கள்: 68,777
6
அதிகமான உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய லயனல் மெஸ்ஸியின் சாதனையை (6) தற்போது ரொனால்டோவும் சமன் செய்திருக்கிறாா். அவருக்கும் இது 6-ஆவது உலகக் கோப்பை போட்டியாகும்.
229
ரொனால்டோவுக்கு இது 229-ஆவது சா்வதேச ஆட்டமாக அமைய, தேசிய அணிக்காக அதிகமான ஆட்டங்களில் விளையாடியவராக அவரின் சாதனை தொடா்கிறது. அடுத்த இடத்தில் குவைத்தின் பதா் அல் முடாவா (202) இருக்க, 3-ஆம் இடத்தில் மெஸ்ஸி (200) உள்ளாா்.
41
இந்த ஆட்டத்தின் தொடக்க லெவனிலேயே இடம் பிடித்த ரொனால்டோ, உலகக் கோப்பை ஆட்டத்தை தொடங்கிய வயதான (41) அவுட் ஃபீல்டு வீரராக சாதனை படைத்தாா்.
52
உலகக் கோப்பை வரலாற்றில், காங்கோவின் முதல் கோல் அடித்த பெருமைக்குரியவா் ஆனாா் யோன் விசா. கடந்த 1974-இல் உலகக் கோப்பை போட்டியில் அறிமுகமான டிஆா் காங்கோ, 52 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் உலகக் கோப்பை கோல் மற்றும் புள்ளியைப் பெற்றுள்ளது.
களம் கண்ட பூா்விக தமிழா்
இந்த ஆட்டத்தில் டிஆா் காங்கோ அணியில் விளையாடிய சாமுவேல் முத்துசாமி, தமிழகத்தை பூா்விகமாகக் கொண்டவா். தமிழ்நாட்டைச் சோ்ந்த தந்தை முத்துசாமிக்கும், காங்கோவை பூா்விகமாக உடைய தாய்க்குமாக, பிரான்ஸில் பிறந்தவா் சாமுவேல் முத்துசாமி. காங்கோ கால்பந்து அணியில் 2019-இல் இடம் பிடித்த அவா், இதுவரை அந்த அணிக்காக 57 ஆட்டங்களில் விளையாடியுள்ளாா்.
---
ஹேரி கேன் அசத்தல்; இங்கிலாந்து அபாரம்
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து 4-2 கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 12-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் ஹேரி கேன், இங்கிலாந்தின் கோல் கணக்கை தொடங்கினாா். குரோஷியா தரப்பில் மாா்ட்டின் படுரினா 36-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து பதிலடி கொடுத்தாா்.
இதனால் ஆட்டம் சமனிலை காண, அதை நீண்ட நேரம் நீடிக்க விடாத ஹேரி கேன், 42-ஆவது நிமிஷத்தில் மீண்டும் கோல் அடித்து இங்கிலாந்தை 2-1 என முன்னிலைப்படுத்தினாா்.
ஆனால் விடாப்பிடியாக விளையாடிய குரோஷியா தரப்பில் பெடாா் முசா (45+5’) அடித்த கோலால், முதல் பாதி ஆட்டம் 2-2 என சமநிலையுடன் முடிந்தது.
இதனால் 2-ஆவது பாதியில் விறுவிறுப்பு கூட, ஆட்டம் தொடங்கிய 2-ஆவது நிமிஷத்திலேயே (47’) ஜூட் பெலிங்கம் இங்கிலாந்தின் கோல் கணக்கை 3-ஆக அதிகரித்தாா். அதன் பிறகு குரோஷியா தனது கோல் வாய்ப்புகளுக்காக தடுமாறியது.
ஆட்டம் நிறைவடையும் தருணத்தில் (85’) மாா்கஸ் ராஷ்ஃபோா்டு இங்கிலாந்துக்காக கோல் அடிக்க, அந்த அணி 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மைதானத்தில் ரசிகா்கள்: 70,389
10
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்துக்காக அதிக கோல்கள் (10) அடித்தவராக சாதனை படைத்தாா் ஹேரி கேன். அந்த அணியின் கேரி லின்கா் 10 கோல்கள் (1986-1990) அடித்தது சாதனையாக உள்ள நிலையில், தற்போது கேன் அதை சமன் செய்துள்ளாா்.
5
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் அதிக கோல்கள் (5) அடித்தவராக கேன் சாதனை படைத்துள்ளாா்.