பத்து... பத்து...
முதுமொழிக் காஞ்சி ஆறாவது பத்து - இல்லை பத்து
முதுமொழிக் காஞ்சி ஆறாவது பத்து - இல்லை பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
மக்கட் பேற்றின் பெறும்பேறு இல்லை.
Advertisement
கடல் சூழ்ந்த இவ்வுலக மக்கள் அனைவர்க்கும் பிள்ளைச் செல்வத்தைவிட அடையக்கூடிய பேறு வேறில்லை.
2. ஒப்புர வறிதலின் தகுவரவு இல்லை.
ஒருவர், தாம் செய்யத்தக்க செயல்களை அறிந்து செய்தலைவிடத் தகுந்த செயல் வேறு எதுவும் இல்லை.
3. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை.
மக்கட்பேறு வாய்க்கத்தக்க கலவியை (புணர்ச்சி)யன்றி பிற நல்ல கலவி வேறில்லை.
4. வாயா விழைச்சின் தீ விழைச்சில்லை.
மக்கட்பேறு பொருந்தாத(வாய்க்காத) கலவியைவிடத் தீய கலவி வேறில்லை.
5. இயல்வது கரத்தலின் கொடுமை இல்லை.
கொடுப்பதற்கு இயைந்ததைக் கொடுக்காமல் மறைத்தலைவிடக் கொடுமையானது வேறில்லை.
6. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை.
மெய்யுணர்வு இல்லாதவனாய் இருத்தலைவிட இறப்பு அவனுக்கு வேறில்லை. "மெய்யறிவு அற்றவன் பிணம்' என்பது கருத்து.
7. நசையின் பெரியதோர் நல்குரவு இல்லை.
ஆசையைவிடப் பெரிய வறுமை வேறு இல்லை.
8. இசையின் பெரியதோர் எச்சம் இல்லை.
ஒருவனுக்குப் புகழைவிட எஞ்சி நிற்கும் பொருள் வேறெதுவும் இல்லை.
9. இரத்தலின் ஊஉங்கு இனிவரவு இல்லை.
ஒருவன், மற்றொருவனிடம் போய் யாசிப்பதைவிட இழிவானது வேறெதுவும் இல்லை.
10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை.
யாசித்து வந்தவர்க்கு அவர் வேண்டிய ஒன்றைக் கொடுப்பதைவிட அடையும் மேன்மை வேறொன்றும் இல்லை.
அடுத்த பத்து... அடுத்த வாரம்...