மீன்பிடித் தொழில் முடக்கம்!
கடலூர், மார்ச் 10: கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முடங்கியதன் காரணமாக, நகரில் வணிகம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 52 கடலோர கிராமங்களைச் சேர்ந்த, 30 ஆயிரம்
கடலூர், மார்ச் 10: கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முடங்கியதன் காரணமாக, நகரில் வணிகம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 52 கடலோர கிராமங்களைச் சேர்ந்த, 30 ஆயிரம் குடும்பங்கள் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள், 2 ஆயிரம் கட்டுமரங்கள், 1,000-க்கும் மேற்பட்ட பெரிய விசைப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன.
மீன்பிடித் தொழில் மற்றும் அதைச் சார்ந்த படகு கட்டும் தொழில், மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழில் உள்ளிட்டவற்றின் மூலம், கடலூரில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது.
Advertisement
Advertisement
சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள், மீன்பிடித் தொழிலிலும் பல பாதிப்புகளை உருவாக்கி விட்டது. அடிக்கடி ஏற்படும் நீரோட்ட மாற்றங்கள், எதிர்பாராத வழக்கத்துக்கு மாறான புயல் சின்னங்கள் உள்ளிட்ட வற்றால் மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நாளொன்றுக்கு 100 டன்களுக்கு மேல் கடலூரில் மீன்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நாளொன்றுக்கு 5 டன் மீன்கள்கூட கிடைக்கவில்லை என்கிறார்கள் மீனவர்கள்.
பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகும் மத்தி மீன்களைப் பிடிக்க, கடலுக்குள் படகுகளில் சென்று, 2 மணி நேரத்தில் 2 டன் மீன்களை அள்ளிக் கொண்டு வருவார்கள் கடலூர் மீனவர்கள். ஆனால் இப்போதோ மத்தி மீன்களுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுனாமியால் ஏற்பட்ட மாற்றம் ஒருபுறம் இருக்க, கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்துவரும் ரசாயனத் தொழிற்சாலைகளால், மீன் பிடித் தொழிலுக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்து மிகப் பெரியது. சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகள் நாளொன்றுக்கு 2.5 கோடி லிட்டர் நிலத்தடி நீரைப் பயன்படுத்துகின்றன.
வர இருக்கும் தொழிற்சாலை ஒன்று, நாளொன்றுக்கு சுமார் 4.5 கோடி லிட்டர் நீரை பயன்படுத்தப் போவதாகவும், அதற்காக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வைத்து இருப்பதாகக் கூறிக் கொண்டு, ராட்சத ஆழ்குழாய்க் கிணறுகளை, ரகசியமாகப் போட்டு வைத்து இருப்பதாகும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரசாயன ஆலைகள் எல்லாம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மட்டுமே கடலில் கலப்பதாக, மிகுந்த சமத்காரமாகத் தெரிவிக்கின்றன. ஆனால் அவை எத்தனை ஆபத்தான கழிவுகளை கடலில் கலக்கின்றன என்று யாரும் அளவிட்டுக் கூற முடியாது. ரசாயனக் கழிவுகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளோ, மக்களுக்கு உண்மையாய் நடந்து கொள்ளாமல், தொழில்கள் வளர வேண்டாமா என்ற போலிக் காரணத்தைக் காட்டி, தொழிலதிபர்களுக்குத்தான் உண்மையாய் நடந்து கொள்கிறார்கள்.
குறைந்தபட்சம் அரசு தன்னிடம் இருப்பதாகக் கூறிவரும், வெளிப்படையான நிர்வாகம்கூட மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தொழிலாளர் துறைகளிடம் இருப்பது இல்லை என்கின்றன கடலூர் பொதுநல அமைப்புகள். இத்தகைய காரணங்களால் இந்த ஆண்டு கடலூர் மீன்பிடித் தொழில் நசிந்துவிட்டது.
இது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில்,
கடந்த 4 வாரங்களாக கடலில் மீன்களே கிடைக்கவில்லை. படகுகள் எல்லாம் டீசலை செலவிட்டு கடலுக்குள் சென்று, வெறுங்கையுடன் திரும்பியதுதான் மிச்சம். கூலிக்கு மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் பலரது நிலையும் பரிதாபமாக உள்ளது.
அடிக்கடி கடலில் நீரோட்டம் மாறி விடுகிறது. கடந்த 4 வாரங்களாக கடல் நீரோட்டம் வடக்கில் இருந்து தெற்காக இருந்தது. மீன்களை எல்லாம் வாரிக் கொண்டு போய்விட்டது. 2 நாள்களாக நீரோட்டம் சற்று மாறியிருக்கிறது. எனினும் 50 சதவீதம் படகுகள்தான் கடலுக்குள் சென்று உள்ளன. ஏப்ரல் 15-க்கு மேல் 45 நாள்கள் மீன்பிடித் தடைகாலம் வர இருக்கிறது. மீனவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றார்.
மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டதால் கடலூரில் ஜவுளி, டிபாட்மெண்ட் ஸ்டோர்ஸ், ரியல் எஸ்டேட்ஸ் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக வணிகர்கள் கூறுகிறார்கள். மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டதால், விலை ஏற்றம் காரணமாக, ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ. 300 ஆகவும், கோழி இறைச்சி விலை கிலோ ரூ. 125 ஆகவும் உயர்ந்துவிட்டது. சிறிய நகரமான கடலூரில் ஹோட்டலில், ஒரு மீன் துண்டு விலை ரூ. 75 ஆக உயர்ந்து இருக்கிறது.