லாரி மீது கார் மோதல்: 5 பேர் சாவு
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை டிரெய்லர் லாரி மீது கார் மோதியதில்
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை டிரெய்லர் லாரி மீது கார் மோதியதில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரம் மாநிலம், அகமத் நகர் மாவட்டம், பாத்ரடி வட்டம், திஷ்கான் கிராமத்தைச் சேர்ந்த திலீப் சந்தானா மகன் யஷ்பால் காந்தி (30). இவரது மனைவி சரிகா (27), இரண்டரை வயது மகள் தீத், மகன் மீத். யஷ்பால் காந்தியின் சகோதரி ஜெயஸ்ரீ (27), அவரது கணவர் விஷ்வா விலாஸ் சவாஜ் (29), மகள் ஷெல் துஸ்வா (8), மகன் விராஸ் துஸ்வா சவாஜ் (5).
இவர்கள் 8 பேரும் ராமேசுவரம், மதுரையில் உள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு காரில் திருச்சி வழியாக சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
காரை யஷ்பால் காந்தி ஓட்டி வந்தார். இந்த கார் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளநாடு அருகே சொரியம்பட்டி பிரிவுச் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்துள்ளது. அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது மோதியதில் கார் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் விஷ்வா விலாஸ் சவாஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகன் விராஸ் துஸ்வா சவாஜ், யஷ்பால் காந்தியின் மனைவி சரிகா, மகள் தீத் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
யஷ்பால் காந்தி, மகன் மீத், விஷ்வா விலாஸ் சவாஜின் மகள் ஷெல் துஸ்வா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று, காருக்குள் இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். லலிதா லட்சுமி விபத்து நடைபெற்ற பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
விபத்து குறித்து வளநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த சங்கரை (32) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.