முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவுக் கடன் இலக்கு ரூ. 4,500 கோடி

இந்த நிதியாண்டில் (2013-2014) கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 4,500 கோடிக்கு கடன் வழங்க இலக்கு

Updated On : 22 மார்ச், 2013 at 1:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

இந்த நிதியாண்டில் (2013-2014) கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 4,500 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 2013 பிப்ரவரி வரையில் கூட்டுறவு நிறுவனங்களால் ரூ. 3,720 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைப்புகள் மூலமாக இந்த ஆண்டு வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கான இலக்கு ரூ.4,000 கோடியாகும். வரும் நிதியாண்டில் இந்த இலக்கு ரூ.4,500 கோடியாக உயர்த்தப்படும்.

Advertisement

கடனை உரிய நேரத்தில் முழுமையாகத் திருப்பிச் செலுத்தக்கூடிய விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் நிறுவனங்கள் மூலமாக வட்டி இல்லா பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2013-2014-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இந்த பயிர்க்கடன் வட்டி மானிய உதவிக்காக ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேமிப்புக் கிடங்குகள்: கடந்த இரண்டாண்டுகளில் கூட்டுறவு அமைப்புகளின் சேமிப்புக் கிடங்குக் கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வலுப்படுத்தப்பட்டுள்ளன.  இதுவரை, ரூ. 237.02 கோடியில், 2.85 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2,270 சேமிப்பு கிடங்குகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் குறைந்தபட்சம் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு வசதியைப் பெற்று, வேளாண் விளைபொருள் அடமானக் கடன்களை விவசாயிகளுக்கு அளிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்: ஏற்கெனவே உறுதியளித்தவாறு கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 22,532 கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

உற்பத்தியாளர் ஒன்றியங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். பால் உற்பத்திச் சங்கங்கள் மூலம் கால்நடைத் தீவனத்தை வழங்க ஈரோட்டிலுள்ள கால்நடைத் தீவன உற்பத்தித் தொழிற்சாலை ரூ.14 கோடி  செலவில் புனரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.