முகப்பு
தமிழ்நாடு

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.156 கோடி

ஏற்கெனவே நடைபெற்று வரும் தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம், கட்டளை

Updated On : 22 மார்ச், 2013 at 1:54 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

ஏற்கெனவே நடைபெற்று வரும் தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம், கட்டளை கதவணையுடன் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகிய பணிகளுக்கு 2013-14-ம் ஆண்டில் ரூ.156.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மூன்றாவது நதி இணைப்புத் திட்டமான பெண்ணையாறு - பாலாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும்.

Advertisement

65 லட்சம் மரக்கன்றுகள்: முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளையொட்டி 2013-14-ம் ஆண்டில் 65 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை: சுற்றுச்சூழல் மாசுபாட்டால் சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு போன்ற ஆறுகள், பக்கிங்காம் கால்வாய், சிறு கால்வாய்கள் உள்பட 214 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர்வழித் தடங்களும், 42 நீர் நிலைகளும் சீர்கெட்டுள்ளன.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துதல், தூர்வாருதல், மாசுபடுத்தும் வடிகால்களைத் தடுத்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கரைகளைச் சீரமைத்து நடைபாதைகள், பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நீர்நிலைகளின் உயிரியல் சூழல் மீட்டெடுக்கும் பணிகளைச் செயல்படுத்த வெளிநாட்டு நிதியுதவியுடன் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஏற்படுத்தப்படும்.

ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிதி நிறுவனத்தின் உதவியோடு செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம் 2013-14-ம் ஆண்டிலும் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் சாலைகளை அமைக்க ரூ.100 கோடி: பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதிக்கு 2012-13-ல் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்காக 2013-14-ம் ஆண்டிலும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.