முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் ரூ.7 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வியாபாரி மீட்பு: 6 பேர் கைது

சேலத்தில் ரூ.7 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பூட்டு வியாபாரியை தனிப் படை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர். வியாபாரியைக்

Updated On : 2 ஏப்ரல் 2013, 3:30 am IST
பகிர்:

சேலத்தில் ரூ.7 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பூட்டு வியாபாரியை தனிப் படை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர். வியாபாரியைக் கடத்திச் சென்று, பணம் பறிக்க முயன்ற 6 பேர் கும்பலைக் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பி.சுரேஷ்குமார் (38). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள வீரபாண்டியார் நகரில் தங்கி, பூட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஈரோட்டைச் சேர்ந்த ராணி (எ) மல்லிகா, தான் பூட்டு வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரம் குறித்துப் பேசுவதற்காக உத்தமசோழபுரம் வி.எஸ்.ஏ. கல்லூரி அருகே வரும்படி சுரேஷ்குமாரை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

அங்கு சென்ற சுரேஷ்குமாரை பெ.தாமோதரன் (42), சே.புவனேஸ்வரன் (24), சி.ராஜா (24), ர. சரவணன் (24), ப.திருமலை (20), ல.குமார் (எ) தங்கராஜ் (25) ஆகியோர் காரில் கடத்திச் சென்றனர்.

காரிப்பட்டி அருகேயுள்ள எஸ்.என்.மங்கலத்தில் உள்ள ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் அவரை அடைத்து வைத்து, சுரேஷ்குமாரின் மைத்துனர் தனபாலைத்  தொடர்பு கொண்டு, சுரேஷ்குமாரை உயிருடன்விட வேண்டும் என்றால், ரூ.7 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர்.

இதுகுறித்து சுரேஷ்குமாரின் சகோதரர் பிரகாஷ் குமார், கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னீஸ், உதவிக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், ஆய்வாளர்கள் சரவணன், தினகரன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப் படையை அமைத்தார்.

கடத்தல் கும்பலின் செல்போன் அழைப்புகளை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த தனிப் படையினர், அங்கு சென்று கடத்தல் கும்பலை கைது செய்தனர். வியாபாரி சுரேஷ்குமார் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கடத்தல் கும்பல் தலைவர் தாமோதரனுக்கு பங்குச் சந்தை வர்த்தகத்தில் சுமார் ரூ.40 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், இழந்த பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிக்க  சுரேஷ்குமாரை கடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டைர் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராணி (எ) மல்லிகாவை தனிப் படை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.