முகப்பு
தமிழ்நாடு

டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை: 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

டிப்ளமோ முடித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்குவதில் அரசு உத்தரவை எதிர்பார்த்து சமூகநலத் துறை

Updated On : 2 ஏப்ரல் 2013, 1:38 am IST
பகிர்:

டிப்ளமோ முடித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்குவதில் அரசு உத்தரவை எதிர்பார்த்து சமூகநலத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்குள்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம், பட்டம், டிப்ளமோ படிப்பு முடித்த பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மாவட்ட அளவில் தகுதியான பயனாளிகளை மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் தேர்வு செய்கின்றனர்.

இதில் பட்டயம் (டிப்ளமோ) முடித்த பெணகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.

இது குறித்து தலித் விடுதலை இயக்க மாநில இணைப்பொதுச்செயலர் கருப்பையா கூறுகையில், "பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்தில் உதவிப் பெற அனைத்து தகுதிகளையும் உள்ள டிப்ளமோ முடித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை மறுக்கப்படுகிறது' என்றார்.

இது குறித்து சமூகநலத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "டிப்ளமோ முடித்தவர்களில் தகுதியான பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ÷இதற்கான அரசாணையில், தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பட்டயப் படிப்புகள் மட்டும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டில் வருகிறது. ஆசிரியர் பயிற்சி, நர்சிங் டிப்ளமோ உள்ளிட்ட பல டிப்ளமோ படிப்புகள் அந்தந்த துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த டிப்ளமோ சான்றிதழ் அந்தந்த துறைகளே அளிக்கின்றன. இதனால் இத்தகைய பிரிவுகளில் டிப்ளமோ பெற்றுள்ள பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்க முடியவில்லை. இதற்கு தெளிவான விளக்கம் அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட  விண்ணப்பங்கள், டிப்ளமோ முடித்த பெண்களிடமிருந்து பெறப்பட்டும் இதுவரை திருமண உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.