மண் திருட்டால் பாழான லா.கூடலூர் ஏரி!
திருக்கோவிலூர் அருகே லா.கூடலூர் ஏரியில் தடையின்றி தொடரும் பகிரங்க மண் திருட்டால் பாழாகி வருகிறது. ஏரியில்
திருக்கோவிலூர் அருகே லா.கூடலூர் ஏரியில் தடையின்றி தொடரும் பகிரங்க மண் திருட்டால் பாழாகி வருகிறது. ஏரியில் 15 அடிக்கும் மேலாக மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால் அபாய பள்ளங்கள் உருவாகியுள்ளன. திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குள்பட்ட லா.கூடலூர் வனப் பகுதியையொட்டி சுமார் 70 ஏக்கர் பரப்பில் ஏரி அமைந்துள்ளது.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்குள்பட்ட இந்த ஏரியை நம்பி சுமார் 150 ஏக்கர் பரப்பில் சாகுபடி நடைபெறுகிறது.
Advertisement
÷குறித்த காலத்தில், பருவமழை பெய்தால், இந்த ஏரிப் பாசனம் மூலம் இரண்டு போகம் விவசாயம் நடைபெறுவதுண்டு. ஆனால் பருவமழை சமீபகாலமாக பொய்த்து வருவதால் ஒருபோகம் மட்டுமே விளைகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் இந்த ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதியில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தினமும் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் களிமண்ணை திருடி டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகிறது. டிராக்டர் மண் ரூ.500 என விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை களிமண் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
÷ஏரியில் சில இடங்களில் 15 அடி ஆழத்துக்கும் மேல் களிமண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. தவிர, மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும் இந்த ஏரியில், அளவுக்கு அதிகமான மண் எடுத்ததால் உருவாகியுள்ள மிக ஆழமான பள்ளத்தில் சிறுவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கக் கூடிய அபாயமும் உள்ளது.
÷இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஏழுமலை கூறியது: பாரம்பரியமிக்க இந்த ஏரியில் நாளுக்குநாள் தொடரும் களிமண் திருட்டைத் தடுத்திட சங்கராபுரம் தாசில்தாரிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. இந்த களிமண் திருட்டில் வருவாய்த்துறையினருக்கும் பங்கு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. இந்த களிமண் திருட்டைத் தடுத்திட மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் இக்கிராம மக்களை ஒன்றுதிரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் தயங்க மாட்டோம் என்றார்.
விரைவில் நடவடிக்கை: வட்டாட்சியர்
இதுகுறித்து சங்கராபுரம் வட்டாட்சியர் அற்புதசாமியிடம் கேட்டபோது, "மண்திருட்டு குறித்து, ஏரி யார் கட்டுப்பாட்டில் உள்ளதோ, அத்துறையினரால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் வருவாய்த்துறையிடம் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பொதுவான கருத்து மக்களிடம் உள்ளதால், எங்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள். இருந்தும் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.