முகப்பு
தமிழ்நாடு

"இந்தியாவுக்கு இது மிகவும் சிக்கலான காலகட்டம்'

இந்தியாவுக்கு இது மிகவும் சிக்கலான காலகட்டம் என்று மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் (படம்) தெரிவித்தார்.

Updated On : 12 ஏப்ரல் 2013, 2:15 am IST
பகிர்:

இந்தியாவுக்கு இது மிகவும் சிக்கலான காலகட்டம் என்று மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் (படம்) தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி கலாசார அகாதெமி சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "அரசு நிர்வாகத்தில் தற்போதைய சில பிரச்னைகள்' என்ற தலைப்பில் அவர் பேசியது:

இன்றைய யுகம் கணினி யுகம். ஒவ்வொருவரும் கணினியை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலைநாடுகளில் உயர் தொழில்நுட்ப சாதனங்களுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அத்தகைய முன்னேற்றம் இல்லை. உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் வரிசையில் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் எதுவும் இல்லை.

Advertisement

Advertisement

அதேபோல் பொது சுகாதாரத்தை எடுத்துக் கொண்டால் பல நோய்களுக்கான சர்வதேச தலைநகரமாக இந்தியா உள்ளது. நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவோரில் அதிகம் பேர் இந்தியாவில் உள்ளனர். உலகிலேயே அதிகமான நிலக்கரி இருப்பு இந்தியாவில் இருந்தும்கூட, மின்சார உற்பத்தியில் உரிய முன்னேற்றம் இல்லை.

நிலக்கரித் துறை, மின் துறை, ரயில்வே துறை, மாநில அரசு என பல தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மின்சார உற்பத்தியில் அதிவேக முன்னேற்றத்தைக் காண முடியும்.

போக்குவரத்தைப் பொருத்தவரை நமது நாட்டு நகரங்களில் சாலைகளின் வளர்ச்சி ஆண்டுக்கு 1 சதவீதம் என்றால், வாகனப் போக்குவரத்தின் வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கூட்டாட்சித் தத்துவ முறை எதிர்பார்த்த அளவில் நடைமுறையில் இல்லை. எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ரூ.20 கோடி செலவிடுவது தாராளமாக நடைபெறுகிறது. மொத்தத்தில் இந்திய நாடு இப்போது மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் உள்ளது.

இந்தப் பிரச்னைகளையெல்லாம் கடந்து நாடு வளர்ச்சி பெற வேண்டுமானால் கறுப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் அமலாக வேண்டும்.

இந்திய முறை வாழ்வியலின் மிக உயர்ந்த மதிப்பீடுகள் குறித்து பள்ளிக் கல்வியிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும். கல்வி, அடிப்படைச் சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உண்மையிலேயே நம் நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமானால், உண்மையிலேயே ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டு வர வேண்டுமானால் முதலில் அதிகாரப் பரவல் என்பதை சாத்தியப்படுத்த வேண்டும். மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களுக்கும், மாநில அரசுகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரவலாக்கப்பட வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் அதிகாரமயமாக்கப்பட்டால் நாட்டின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

முன்னதாக, அகாதெமியின் தலைவர் ஜி.நாராயணசாமி வரவேற்றார். இறுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.ராகவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.