முகப்பு
தமிழ்நாடு

நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகையை அடுத்துள்ள நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றன.

Updated On : 12 ஏப்ரல் 2013, 2:10 am IST
பகிர்:

நாகையை அடுத்துள்ள நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றன.

புகழ் பெற்ற தர்காக்களுள் ஒன்றான நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா. சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித நேயம் போற்றும் தலமாகப் போற்றப்படுகிறது. இந்த தர்காவின் கந்தூரி விழா ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டுக்கான கந்தூரி விழா (456-ஆம் ஆண்டு) கொடியேற்றம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக, நாகையிலிருந்து நாகூர் வரை கொடி ஊர்வலம் நடைபெற்றது. நாகை பேய்க்குளம் பகுதியில் தொடங்கி, புதுப்பள்ளி சாலை, சாலாப் பள்ளி தெரு, நூல்கடைத் தெரு, வெங்காயக்கடைத் தெரு, பெரியக் கடைத் தெரு, அண்ணா சிலை வழியாக நாகை- நாகூர் முதன்மை சாலையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டிப் பல்லக்கு, முகமது கவுஸ் கப்பல் ஆகிய அலங்கார வாகனங்களில் புனித கொடிகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.

மனோரா, சிறிய கப்பல், நகரா மேடை, ரயில் இன்ஜின் உள்பட பல்வேறு அலங்கார வடிவங்கள் இந்த ஊர்வலத்தில் அணிவகுத்தன.

நாகூர் செய்யது பள்ளித் தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரயிலடி தெரு வழியாக புதன்கிழமை இரவு நாகூர் தர்காவின் அலங்கார வாசல் முன்பாக கொடி ஊர்வலம் நிறைவடைந்தது.

தர்கா பரம்பரை எம். கலிபா மஸ்தான் சாகிபு, நிர்வாக அறங்காவலர் எஸ்.ஏ. சேக் அசன் சாகிபு உள்ளிட்டோர் முன்னிலையில், பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தர்காவின் கந்தூரி விழா புனித கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி, நாகூர் தர்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.