முகப்பு
தமிழ்நாடு

இலங்கைக்கான தூதராக தமிழரை நியமிக்க வேண்டும்:  தொல்.திருமாவளவன்

இலங்கைக்கான இந்திய தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

Updated On : 22 ஏப்ரல், 2013 at 5:19 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

இலங்கைக்கான இந்திய தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தினமும் தாக்கப்படுகின்றனர். பலர் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும் இந்திய அரசு, இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250 பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சுஜாதா, தரங்கிணி, வருணா ஆகிய மூன்று கப்பல்கள் இந்தப் பயிற்சியை அளித்துள்ளன. பயிற்சி பெற்ற சிங்களப் படையினருக்கு இந்திய தூதரகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய இலங்கைக் கடற்படை துணைத் தளபதி ஜெயந்த் கொலம்பகே என்பவர் இலங்கைக் கடற்படையினரில் 80 சதவீதம் பேருக்கு இந்தியாதான் பயிற்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இது தமிழக மக்களைப் புண்படுத்துவதாக இருக்கிறது. தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் இந்திய அரசின் ஆதரவோடுதான் நடத்தப்படுகிறதோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதும் அவர்கள் இந்திய மீனவர்களையே தாக்குவதும் தொடர்கதையாக இருக்கிறது. தனது நாட்டு குடிமக்களைக் கொல்பவர்களுக்குத் தாங்களே பயிற்சி அளிக்கும் இத்தகைய அவலம் உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை. இந்திய அரசு இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.