உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை: ரத்து செய்யக் கோரி வழக்கு
உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடுவதை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடுவதை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர் கே.ஷியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மே மாத கோடை வெயிலின் வெப்பத்தை ஆங்கிலேய நீதிபதிகளால் தாங்க இயலாத காரணத்தால், நீதிமன்றங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனால் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இப்போது நீதிமன்றங்களில் குளிரூட்டப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. நீதிபதிகளின் அறைகள், நீதிபதிகளின் கார்கள் முதலானவைகளில் கூட குளிரூட்டப்பட்ட வசதிகள் உள்ளன. ஆகவே, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை இன்றும் பின்பற்ற வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
Advertisement
Advertisement
இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 28-ஆவது அறிக்கை கடந்த 2008-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை என்ற ஆங்கிலேய ஆட்சிக் கால நடைமுறை தொடர்வது பொருத்தமில்லாதது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால் நீதிமன்றங்களின் வேலை நாள்களை அதிகரிக்க வேண்டும் என்று நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையிலான மத்திய சட்டக் கமிஷன் கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை விடுவது தொடர்கிறது. இந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் ஜூன் 2-வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பொது விடுமுறை தினங்களுக்காக 22 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. தசரா பண்டிகைக்காக அக்டோபரில் 9 நாள்களும், கிறிதுமஸ் பண்டிகைக்காக டிசம்பரில் 6 நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பால் ஆண்டில் 30 நாள்களுக்கு மேல் நீதிமன்றம் செயல்படாத நிலைமை உள்ளது.
ஆண்டின் 365 நாள்களில் 210 நாள்கள் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குகின்றன. தற்போதைய நிலவரப்படி உயர் நீதிமன்றத்தில் 5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 365 நாள்களும் தொடர்ந்து நீதிமன்றம் இயங்கினாலும் கூட தேங்கிக் கிடக்கும் இந்த சூழலில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட கோடை விடுமுறையை தற்போதும் பின்பற்றுவது மக்கள் நலன்களுக்கு எதிரானது; சட்ட விரோதமானது.
ஆகவே, நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை விடுவதை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவித்து ஏப்ரல் 26-ஆம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பிறப்பித்த அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஷியாம் சுந்தர் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.