முகப்பு
தமிழ்நாடு

குரூப்-2 வினாத்தாள் வெளியான சம்பவம்: கைதான வணிக வரித்துறை அதிகாரியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வணிக வரித்துறை துணை ஆணையரை 3 நாள்கள்

Updated On : 22 மே 2013, 2:04 am IST
பகிர்:

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வணிக வரித்துறை துணை ஆணையரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க ஈரோடு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2012-ஆம் ஆண்டில் நடந்த குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பாக ஈரோடு நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

பின்னர் இந்த வழக்கு கோவை சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கை விசாரித்து வந்தனர். இந்நிலையில், நாகை வணிக வரித்துறை துணை ஆணையர் ரவிகுமார் (32) என்பவரை சிபிசிஐடி போலீஸார்

மே 16-ஆம் தேதி கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த ரவிகுமார், ஓராண்டாக நாகையில் பணிபுரிந்து வந்தார். இவர் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி ஈரோடு குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த மாஜிஸ்திரேட் கவிதா, கைது செய்யப்பட்ட ரவிகுமாரை மே 24-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.