முகப்பு
தமிழ்நாடு

தனியார் மூலம் ரயில் பெட்டி தயாரிக்கும் முடிவைக் கைவிட வேண்டும்

தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில் பெட்டி தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 2 ஜூன் 2013, 2:05 am IST
பகிர்:

தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில் பெட்டி தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அந்தக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 1952-இல் தொடங்கப்பட்ட பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்.) 11,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இங்கு ரூ. 240 கோடியில் 2-ஆவது யூனிட் தொடங்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்காமல் முடங்கியுள்ளது.

இந்நிலையில் 400 ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான ஆர்டர், மேற்கு வங்கத்தில் உள்ள 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐ.சி.எஃப். தொழிலாளர்கள் உழைத்து உருவாக்கிய சுமார் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள வரைபடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தொழில்நுட்பம் மட்டுமன்றி சக்கரங்கள், இரும்பு, மின் சாதனங்கள் ஆகியவையும் தரப்படுகின்றன.

இவ்வளவுக்குப் பிறகும் ஒவ்வொரு பெட்டிக்கும் பெரம்பூரில் உற்பத்தியாகும் அடக்க விலையைவிட ரூ. 50 லட்சம் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 பெட்டிகளுக்கும் ரூ. 120 கோடி அதிகமாக தர வேண்டியிருக்கும்.

அரசின் இந்த முடிவால் பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையை மூடும் நிலை ஏற்படும்.

எனவே, தனியாரிடம் 400 பெட்டிகள் தயாரிப்பை ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். பெரம்பூர் ஐ.சி.எஃப்பில் திட்டமிட்டபடி 2-ஆவது யூனிட்டை தொடங்க வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.