பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறக்க வாய்ப்பில்லை
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக வழக்கமான நாளான ஜூன் 12-இல் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட இயலாத சூழல் உருவாகியுள்ளது.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக வழக்கமான நாளான ஜூன் 12-இல் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட இயலாத சூழல் உருவாகியுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்படும். மேலும், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மற்றும் நீர் இருப்பைப் பொருத்து தண்ணீர் திறக்கும் நாள்கள் முடிவு செய்யப்படும்.
மேட்டூர் அணை மூலம், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
Advertisement
கடந்த 79 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் மட்டுமே குறித்த நாளில் அதாவது ஜூன் 12-இல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டன. மேலும், அணையின் நீர் இருப்பைப் பொருத்து, குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
எனினும், மேட்டூர் அணையிலிருந்து 53 ஆண்டுகள் குறித்த நாளில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.99 அடியாகக் குறைந்தது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்கு சுமார் 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு 3.53 டிஎம்சியாக மட்டுமே உள்ளது. இதனால், புதன்கிழமை காலை மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை (ஜூன் 12) அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து அரசிடமிருந்து எந்தவித உத்தரவும் வரவில்லை என மேட்டூர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
ஜூன் 20-ஆம் தேதிக்குள் மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து இருந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறும் என்பதால், விவசாயிகள் கவலையுடன் காவிரி நீரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்பட்ட ஆண்டுகள்
1934-1935, 1935-1936, 1939-1940, 1965-1966, 1979-1980,
1980-1981, 1984-1985, 1992-1993, 1993-1994, 1994-1995,
1997-1998, 2000-2001, 2001-2002, 2006-2007, 2008-2009.
ஜூன் 12-க்கு முன்பாக தண்ணீர் திறக்கப்பட்ட ஆண்டுகள்
1936-1937, 1937-1938, 1938-1939, 1940-1941, 1941-1942,
1942-1943, 1943-1944, 1944-1945, 1945-1946, 1947-1948,
2011-2012.