முகப்பு
தமிழ்நாடு

குவைத் இந்தியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

குவைத் நாட்டு அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 12 ஜூன் 2013, 1:40 am IST
பகிர்:

குவைத் நாட்டு அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

38 லட்சம் மக்களைக் கொண்ட குவைத் நாட்டில் 26 லட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அதில் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியர்கள். குவைத் அரசின் கெடுபிடிகளால், முறைப்படி விசா பெற்று அங்கு வசிக்கும் இந்தியர்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

கடுமையான உழைப்பின் மூலம் குவைத்தின் வளர்ச்சிக்கு காரணமான வெளிநாட்டவர்கள் சுமார் 10 லட்சம் பேரை வெளியேற்ற அந்தநாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற குவைத் அரசுக்கு உரிமை உள்ளது.

ஆனால், முறையான விசா பெற்று, தகுந்த சட்ட ஆவணங்களோடு இருக்கின்ற இந்தியர்களையும் அதிரடியாகக் கைது செய்து, அவர்கள் விளக்கம் அளிப்பதற்குக்கூட வாய்ப்புத் தராமல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவது அநீதியானது.

குவைத் அரசிடம் நிலைமையைத் தெளிவுபடுத்தி, முறையான விசா ஆவணங்களுடன் இந்தியர்கள் குவைத்துக்குச் செல்வதற்கான சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

குவைத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, இந்தியாவுக்கு வந்தவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்ணீரோடு தெரிவித்து உள்ளனர்.

எனவே, குவைத்தில் வாழும் இந்தியர்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.