முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தொடக்கம்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு 4 மாதங்களுக்குப் பிறகு படகுப் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 2 ஜூலை, 2013 at 1:26 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு 4 மாதங்களுக்குப் பிறகு படகுப் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி அருகே கடலில் அமைந்துள்ள பாறையொன்றில் அமைந்துள்ளது 133 அடி உயர திருவள்ளுவர் சிலை. கடந்த 1.1.2000-ல் திறந்து வைக்கப்பட்ட இச்சிலையை பார்வையிடுவதற்காக படகுகள் மூலம் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

உப்புக் காற்றால் சிலை சேதமடையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக்கான் என்னும் ரசாயனக் கலவை பூசப்படுகிறது. சிலை அமைக்கப்பட்ட பின்

Advertisement

3-வது முறையாக ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான பணியை நெய்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது.

சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த ஜூன் 15-ம் தேதி நிறைவடைந்த நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை படகுப்  போக்குவரத்து தொடங்கியது.

திருவள்ளுவர் சிலையைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கிய நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு காலை 9 மணிக்கு முதல் படகு 150 பயணிகளுடன் சென்றது.

திடீர் நிறுத்தம்: திருவள்ளுவர் சிலைக்கு 3 முறை படகுகள் சென்று வந்த நிலையில் திடீரென சிலை அமைந்துள்ள படகுத் தளத்தில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் பகல் 11 மணிக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டன. முதல் நாளே படகு சேவை தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.