நெய்வேலியில் இன்று உண்ணாவிரதம்; 4-ல் பந்த்
என்எல்சி பங்கு விற்பனை முடிவைக் கைவிட வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக, அனைத்துத்
என்எல்சி பங்கு விற்பனை முடிவைக் கைவிட வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக, அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஸ்கியூ பாலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெய்வேலி மற்றும் மந்தாரக்குப்பத்தில் வரும் 4-ம் தேதி முழு வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வர்த்தக சங்கத்தினர், ஆட்டோ, வேன் ஓட்டுநர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நெய்வேலியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
செபி அமைப்பின் நெருக்குதலைக் காரணம் காட்டி மத்திய அமைச்சரவை, என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை பொதுமக்களிடம் விற்று அதன் மூலம் ரூ.466 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
Advertisement
இம்முடிவை அறிந்தவுடன் நெய்வேலியில் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
என்எல்சியில் உள்ள தொழிற்சங்கங்கள், பொறியாளர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு இணைந்து ஜூன் 27 முதல் போராட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் போராட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நிறுவனத் தொழிலக மற்றும் அலுவலக வாயில் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஸ்கியூ பாலத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், புதன்கிழமை இரவு தொமுச வளாகத்தில் வேலைநிறுத்த அறிவிப்புக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நெய்வேலி அதிமுக தொழிற்சங்க வளாகத்தில் தொழிற்சங்க மற்றும் பொறியாளர் சங்கக் கூட்டமைப்பினர், வர்த்தக சங்கம் மற்றும் பில்டர்ஸ் அசோஸியேஷன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவர் அபு தலைமையில் நடைபெற்றது. ÷இக்கூட்டத்தின் முடிவில் 3-ம் தேதி இரவுப் பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கவிருப்பதால் 4-ம் தேதி காலை 6 முதல் மாலை 6 மணி வரை மந்தாரக்குப்பம் மற்றும் நெய்வேலி நகரில் முழு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்திருப்பதாக அதிமுக தொழிற்சங்க செயலர் ரா.உதயக்குமார் தெரிவித்தார்.
மேலும் அன்றைய தினம் ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுநர்களும் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதால் அன்றைய தினம் நெய்வேலி நகரிய பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளோம் என தொமுச செயலர் ராசவன்னியன் தெரிவித்துள்ளார்.