முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் நீர்மட்டம் 42 அடியை எட்டியது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 42.10 அடியாக உயர்ந்தது. கடந்த 6 நாள்களில் அணையின் நீர்மட்டம் 27 அடி உயர்ந்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2013, 1:28 am IST
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 42.10 அடியாக உயர்ந்தது. கடந்த 6 நாள்களில் அணையின் நீர்மட்டம் 27 அடி உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி அணையிலிருந்து உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது.

இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 25-ஆம் தேதி மேட்டூர் அணைக்கு நொடிக்கு 80 கன அடி அளவில் இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 38,547 கன அடியாக இருந்தது.

ஜூன் 25ஆம் தேதி 15.51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 42.10 அடியாக உயர்ந்தது. கடந்த 6 நாள்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 26.59 அடி உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், கபினி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்வரத்து தீங்கள்கிழமை நொடிக்கு 33,419 அடியாகக் குறைந்தது.

நீர்வரத்து குறைந்தாலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அணையின் நீர்இருப்பு திருப்திகரமான நிலையை எட்டினால், காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது.

வழக்கமாக அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

பிலிகுண்டுலுவில் 13,000 கன அடி நீர்வரத்து: கபினி அணையில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் திங்கள்கிழமை நீர்வரத்து நொடிக்கு 13,000 கன அடியாகக் குறைந்தது.

தடை நீக்கப்படுமா?

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் தடையை நீக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.