கருணாநிதி, வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி: பாஜகவின் பொதுச்செயலாளர் வி.ரமேஷ், சேலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் படுகொலையை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Advertisement
கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் 6 பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ ஆட்சியாளர்ளுக்கு நேரம் இருப்பதாகத் தெரியவில்லை.
வைகோ: ஆடிட்டர் ரமேஷ், படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் தருகிறது. சமயக் கருத்துகளைக் கொண்டோர் பாதுகாப்பாக அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன்: ஆடிட்டர் ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிக்கவும், இந்தப் படுகொலைகளைத் தடுக்கவும் மாநில அரசும், காவல்துறையும் விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மனித நேய மக்கள் கட்சி: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப் பட்டது வன்மையாக கண்டனத்திற்குரியது. தமிழக அரசு இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.