கலாசாரத்தை சிதைத்து வளரும் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது
பல்வேறு சமுதாயங்களின் கலாசாரத்தை சிதைத்து வளரும் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது, என சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரும் கட்டுரையாளருமான எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.
பல்வேறு சமுதாயங்களின் கலாசாரத்தை சிதைத்து வளரும் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது, என சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரும் கட்டுரையாளருமான எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.
மதுரையில் சௌராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கத்தின் "சிட்கான்-2013' கருத்தரங்கின் 2ஆம் நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சமூகம், வணிகம் மற்றும் மேம்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்.குருமூர்த்தி பேசியது:
எந்தவொரு சமுதாயத்தையும் புதிதாக உருவாக்க முடியாது. இருக்கின்ற சமுதாயத்தைப் பாதுகாக்க முடியும். சமுதாயம் என்பது கிளையாக இருக்கும். இதை பிரிவாகப் பார்க்கும்போது, அரசியல்வாதிகளும், சில சமுதாயத் தலைவர்களும் தவறான கருத்துகளை உருவாக்கி விடுகின்றனர். இதைத் தடுக்க வேண்டும்.
Advertisement
சமுதாயத்தைப் புரிந்துகொண்டால்தான், அதைப் பாதுகாக்க முடியும். எந்தவொரு சமுதாயத்தையும் மற்ற சமுதாயங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் நிறைகுறைகள் தெரியும். இந்த குணம் ஒவ்வொருவரிடமும் வளர வேண்டும். இது ஒரு சமுதாயத்துக்கு மட்டுமின்றி, அனைத்து சமுதாயங்களுக்கும், நாட்டுக்கும் தேவை. இது சௌராஷ்டிரா சமுதாயத்துக்கும் பொருந்தும்.
தற்போது உலகம் பெரிய மாறுதல்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாறுதல்கள், கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நமது இந்து கலாசாரம், பண்பாடு காப்பாற்றப்பட்டு வருகிறது. எப்போதும் மாறுதல்கள் தேவைதான். அதேசமயம், பழமைக்கும், புதுமைக்கும் வித்தியாசமில்லாத மாற்றம் ஏற்பட்டிருப்பதில்தான் நமது கலாசாரம், பண்பாடு காப்பாற்றப்பட்டுள்ளது.
ஆனால், மேற்கத்திய நாடுகளில் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நாடுகள் மட்டுமின்றி, கல்வியில், பொருளாதாரத்தில் வளர்நதிருப்பதாக கூறப்படுóம் நாடுகளோடு பலவிதத்தில் நமது நாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதுதான் ஒரு நாட்டின் அளவுகோல்.
உலக மனித வள மேம்பாட்டில் முன்னணியில் இருக்கும் நார்வே, சுவீடன் போன்ற நாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எல்லாத் துறைகளிலும் ஆண், பெண் பாகுபாடின்றி இருக்கின்றனர். இதைப் பார்த்து பல நாடுகள் இத்தகைய உறவுநிலை வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், அங்குள்ள உண்மை நிலை என்ன, கலாசாரம், பண்பாடு இருக்கிறதா என்றால் இல்லை. அங்குள்ள 67 சதவீதம் குழந்தைகளுக்கு தந்தை பெயரே தெரியாது. குடும்பம் என்ற ஒன்று அங்கே இல்லை.
குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு கிடையாது. அந்த உரிமை நாட்டின் அரசுக்குத்தான் இருக்கிறது. இது நமக்கு தேவையா?
இதேபோன்றுதான் எல்லா வளங்களும் நிறைந்த அமெரிக்காவின் நிலைமையும். உலகில் அதிக கடன் வாங்கும் நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது. குடும்ப சேமிப்புகள் அங்கே அழிக்கப்பட்டு, நிறுவனங்கள் வசம் சென்றுவிட்டன.
எனவே, கலாசாரம் இணைந்து வளரும் பொருளாதாரம்தான் நாட்டின் வளர்ச்சிக்கு நிரந்தரம்.
நமது நாட்டிலும் உலகமயமாக்கல் கொள்கைகள் மூலம் நமது பெண்களின் மனதை மாற்ற, கலாசாரம், பண்பாட்டைச் சீர்குலைக்க, குடும்ப சேமிப்புகளைக் குறைக்க முயற்சி நடந்தது. ஆனால், நமது பெண்கள் ஏமாறவில்லை. கலாசாரத்தையோ, பண்பாட்டையோ இழக்க விரும்பவில்லை. இதை சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் சமுதாயங்கள் காக்கப்பட வேண்டும். இதைப் புரிந்து கொண்ட ஒரே இயக்கம் சுதேசி இயக்கம்தான். இந்து கலாசாரம், பண்பாடு சிதையாமல் பாதுகாக்கும் பணியில் அனைவரும் இணைந்து ஈடுபட வேண்டும், என்றார்.
சுதேசி விழிப்புணர்வு இயக்க இணை அமைப்பாளர் சீனிவாஸ், சிட்கான் தலைவர் இஆர். குமரேசன், துணைத் தலைவர் கேகேஜி பிரபாகரன், பொதுச் செயலாளர் எஸ்கேஆர் ரமேஷ், பொருளாளர் எம்கே கலாதர்பாபு, இணைச் செயலாளர் டிஆர் மோகன்ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஜி.ஆர்.மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியுடன் 2ஆம் நாள் நிகழ்ச்சி துவங்கியது.
இந்த நிகழ்வில் அஞ்சலி நல்லெண்ணெய் நிர்வாக இயக்குநர் நடராசன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.