முகப்பு
தமிழ்நாடு

ஐ.ஓ.பி. வங்கிச் சேவை 3-வது நாளாக முடக்கம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மைய கணினி இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் தொடர்ந்து 3-ஆவது நாளாக பாதிக்கப்பட்டன.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 2:59 am IST
பகிர்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மைய கணினி இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் தொடர்ந்து 3-ஆவது நாளாக பாதிக்கப்பட்டன.

புதன்கிழமை நண்பகல் 12 மணி முதல் 2 மணிவரை மட்டுமே வங்கிப் பணிகள் நடைபெற்றன. வங்கி காசோலைகள் பரிவர்த்தனை மட்டும் நடந்தது. பணம் எடுக்கவோ, பணத்தை செலுத்தவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.,) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த வங்கி நாடு முழுவதும் மூவாயிரம் கிளைகளை கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னை அண்ணாசாலையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

Advertisement

Advertisement

லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த வங்கியில் கடந்த மூன்று நாள்களாக வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மைய வங்கி கோர் பேங்கிங் கணினி இணைப்பில் (சர்வர்) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பணப்பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், பணம் செலுத்துதல் போன்ற அன்றாட வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த கோளாறால் நாடு முழுவதும் ஐ.ஓ.பி.,யின் வங்கி நடவடிக்கைகள் முடங்கின.

இதுகுறித்து ஐ.ஓ.பி.,யின் மேலாளர் ஒருவர் கூறியது:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சர்வரில் திடீரென கோளாறு ஏற்பட்டது. தாற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோளாறை சரிசெய்ய சிங்கப்பூரில் இருந்து நிபுணர் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு வங்கிப் பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.