கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3.5 கோடி நகைகள் மீட்பு: 2 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வேனை கடத்திச் சென்று திங்கள்கிழமை கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 1,500 பவுன் தங்க நகைகளை போலீஸார் புதன்கிழமை மீட்டனர். இது தொடர்பாக வேன் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வேனை கடத்திச் சென்று திங்கள்கிழமை கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 1,500 பவுன் தங்க நகைகளை போலீஸார் புதன்கிழமை மீட்டனர். இது தொடர்பாக வேன் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூரில் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான நகை வடிவமைப்பு மையம் உள்ளது. இங்கிருந்து அந்நிறுவனத்துக்குச் சொந்தமாக தமிழகத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள விற்பனை மையங்களுக்கு விநியோகிக்க ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கடந்த திங்கள்கிழமை சென்றது. வேனை ஓசூரைச் சேர்ந்த தங்கவேலு மகன் சதீஸ்குமார் (23) ஓட்டி வந்தார். மேலும் பாதுகாப்புக்கு முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி, நகைகளை விநியோகிக்கும் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
திருப்பத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள விற்பனை மையங்களில் நகைகளை விநியோகம் செய்த அந்த வாகனம், திங்கள்கிழமை மதியம் சென்னைக்கு புறப்பட்டது.
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக ஊழியர்கள் வேனை நிறுத்திவிட்டு சென்ற போது வேன் கடத்தப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதற்கிடையில் அந்த வேனை கடத்திய மர்ம நபர்கள், ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தில் நிறுத்தி அதிலிருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பினர். இதனிடையே, ரூ.3.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸில், பெங்களூரைச் சேர்ந்த விஜயகுமார் புகார் செய்தார்.
இதையடுத்து ஐ.ஜி. மஞ்சுநாதா உத்தரவின்பேரில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட 36 மணி நேரத்தில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளை ஓசூரில் தனிப்படையினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட தங்க நகைகள் புதன்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. நகைகளை ஐ.ஜி. மஞ்சுநாதா, டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக சதீஸ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் விரைவில் பிடிபடுவர்என்றார் ஐ.ஜி. மஞ்சுநாதா.