முகப்பு
தமிழ்நாடு

மறைந்த வழக்குரைஞர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

மறைந்த வழக்குரைஞர்கள் 66 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 3:29 am IST
பகிர்:

மறைந்த வழக்குரைஞர்கள் 66 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்தின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுதாரருக்கு அல்லது நியமன தாரருக்கு வழக்குரைஞர்கள் நல நிதியத்தில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் இந்த நிதியுதவி ரூ.2 லட்சம் என மறைந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள், நியமனதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிதியுதவியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் கழகம் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தது.

அந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, வழக்குரைஞர்களின் நிதியுதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5.25 லட்சமாக உயர்த்தி வழங்கி அறிவித்தார். மேலும், இந்த உதவித் தொகையை இடையூறு இல்லாமல் தொடர்ந்து வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்துக்கு ஆண்டுதோறும் ரூ.4 கோடி தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்த வழக்குரைஞர்களுக்கு அவர்களின் பதிவு காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரே சீராக எந்தவித வகைப்பாடும் இல்லாமல் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, மறைந்த 66 வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் நியமனதாரர்களுக்கு தலா ரூ.5.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களில் ஏழு பேருக்கு தலா ரூ.5.25 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, சட்டத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.