வட மாவட்டங்களில் தொடரும் கனமழை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
வட மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வட மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவர் அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவுகளின் விவரம்:
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
Advertisement
நீர் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மின் வெட்டு ஏற்படாமல் இருக்கவும், மின்சார கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கழிவுநீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையில் போதுமான ஜெனரேட்டர்களை இருப்பில் வைத்துக் கொள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு நகராட்சி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், நெரிசல் மிகுந்த சாலைகளில் தேங்கும் நீரை உடனடியாக கனரக பம்ப் செட்டுகள் மூலம் அகற்ற நெடுஞ்சாலைத் துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீரினால் பரவும் நோய்களான டெங்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகியன ஏற்படாத வகையில் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முழுவீச்சில் மேற்கொள்ளும். இதற்கான போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளன.
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குகைப் பாதையில் நீர் தேங்காதவாறு தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குத் தேவையான கனரக பம்ப் செட்டுகளை தயார் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வைத்துக் கொள்ளும்.
எந்த நிலையையும் எதிர்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயாராக உள்ளது.
வடபழனி சந்திப்பு, ஜவஹர்லால் நேரு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதை துணை ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் அளவிலான அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்க பொதுப் பணித் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதாலும், கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதையும் கருத்தில் கொண்டு, வீராணம் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள பொதுப் பணித் துறையினரால் தனிக் கவனம் செலுத்தப்படும். காவிரிக் கரையோர மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்வர்.
உடனடி உதவி: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழை காரணமாக எந்தவித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. வெள்ளத்தால் இனி ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணம் உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.