காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷமருந்தி தற்கொலை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (39). ஆட்டோ ஓட்டுநரான இவர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற நிர்ணயித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது.
Advertisement
Advertisement
இதனால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரக் கூடாது என்று சக ஆட்டோ ஓட்டுநர்களிடம் பிரபு கடந்த சில நாள்களாகக் கூறி வந்ததாகத் தெரிய வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கடந்த மார்ச் 31 -ஆம் தேதி மாலை ஆட்டோவை நிறுத்தியிருந்த பிரபு, திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்றும் முழக்கமிட்டப்படி தனது கையில் வைத்திருந்த விஷத்தை அருந்திவிட்டு மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பிரபுவை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை அவர் இறந்தார். இதுபற்றி தகவலறிந்த சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் சடலத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வருவாய்த் துறை அதிகாரிகள் சமரசம் செய்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.
இந்த நிலையில், திமுக மத்திய மாவட்டச் செயலரும், வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பிரபுக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.