நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி வா.கடல்தீபன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி வா.கடல்தீபன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடலூர் செல்லகுப்பத்தைச் சேர்ந்த வாகரன் மகன் கடல்தீபன் (37) . பொறியாளரான இவர், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, குறிஞ்சிப்பாடி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டவர் இவர்.
இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தின்போது, கடந்த 10 -ஆம் தேதி இவரது தலைமையில் கட்சியினர் சிலர், கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்தை வழிமறித்து, அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் ர.பசவராஜ் அளித்த புகாரின் பேரில், கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன்படி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வா.கடல்தீபன், மாவட்டச் செயலர் சாமிரவி, கோண்டூர் ராஜா, சாமியார்பேட்டை தனசேகர், முதுநகர் நாராயணன், அழகியநத்தம் சுரேன், பச்சையாங்குப்பம் நாராயணசாமி ஆகியோரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இந்த நிலையில், கடல்தீபனின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார்.
இந்தப் பரிந்துரை நிலுவையில் இருக்கும் நிலையில், கடல்தீபனின் தந்தை மாவட்ட ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தார். அதில், 'தனது மகனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறான நடவடிக்கை அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும்' எனவும் கூறியிருந்தார்.
எனினும், அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடல்தீபனிடம், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகல் புதன்கிழமை வழங்கப்பட்டது.