அமைச்சர்கள் வேலுமணி-தங்கமணி தில்லி பயணம்
தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தில்லியில் மத்திய அமைச்சர்கள் சிலரை புதன்கிழமை சந்தித்துப் பேசுவார்கள் என எதிபார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை. சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டனர்.
அவர்கள் புதன்கிழமை தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேசுவார்கள் எனத் தெரிகிறது. மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியுடனான சந்திப்பின் போது, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகள் குறித்து கோரிக்கை விடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரங்கள், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.