சொத்து வரி உயர்வு: தலைவர்கள் கண்டனம்
சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மா.சுப்பிரமணியன்: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அது கொள்கை முடிவு என்று எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றது அதிமுக அரசு. ஆனால், சொத்து வரி விவகாரத்தில் மட்டும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைக் காரணம் காட்டி இப்படி விண்ணைத் தொடும் அளவுக்கு சொத்து வரியை உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மக்களை துயரத்தில் ஆழ்த்தியிருப்பது பொறுப்பற்றது.
ராமதாஸ் (பாமக): சென்னை உயர் நீதிமன்றமே சொத்து வரியை உயர்த்தும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதைப் பார்க்கும் போது, சொத்து வரி உயர்வு நியாயமாகத் தோன்றலாம். ஆனால், ஒரே நேரத்தில் 100 சதவீதம் உயர்த்துவது சரியல்ல. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.3,558 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த இழப்புடன் ஒப்பிடும் போது சொத்து வரியை உயர்த்தாததால் ஏற்படும் இழப்பு மிகமிகக் குறைவு. எனவே, சொத்து வரி உயர்வைப் பாதியாகக் குறைக்க வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வால் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். வாடகை பல மடங்கு உயர்த்தப்படும் அபாயம் ஏற்படும். இதனால் வீடில்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்போர்களின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகும். இதனை மார்க்சிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய சுமார் ரூ. 3,000 கோடி நிதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வரி உயர்வைத் தவிர்த்திருக்கலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.