ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற
ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை 1995-ம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. 2007-ம் ஆண்டு இந்த ஆலை 900 டன் முதல் 1200 டன் வரை காப்பர் உற்பத்திக்கான உரிமம் பெற்றபோது, 172 ஹெக்டேர் நிலம் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்த தகவல் தவறானது. ஸ்டெர்லைட் ஆலைக்கு 102 ஹெக்டேர் நிலம் தான் உள்ளது. இந்த தகவலை மத்திய, மாநில அரசுகள் முறையாக ஆய்வு செய்யவில்லை.
இதேபோல நிறுவனத்தைச் சுற்றி 250 மீட்டர் அளவில் பசுமை வளையத்தை அமைப்பது அவசியம். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை 25 மீட்டர் அளவில் மட்டுமே இதை செயல்படுத்தி வருகிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இந்த நிறுவனம் போதிய அக்கறை செலுத்தவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் கூட இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப்புகைகளை வெளியேற்ற குறிப்பிட்ட உயரத்திலான புகைபோக்கிகளை அமைக்கத் தவறியுள்ளது. ஆலையில் இருந்து மெர்குரி உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றவும் போதிய திட்டங்களை வகுக்கவில்லை. நிறுவனத்தைச் சுற்றியுள்ள இடத்தில் உள்ள நிலத்தடி நீரில் குளோரைட், சல்பேட் உள்ளிட்டவையின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் உள்ளது. இந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள 15 கிராமங்களின் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 15 கிராமங்களிலும் நிலத்தடி நீரின் அளவு கடுமையாக மாசடைந்திருப்பதாகவும், அவை குடிக்க உகந்ததல்ல என்பதும் தெரியவந்தது. எனவே மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் இயக்குநர், மாநில சுற்றுச்சூழல் துறைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.