முகப்பு
தமிழ்நாடு

18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கு: 3-ஆவது நீதிபதி முன்பு விசாரணை தொடங்கியது

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 3-ஆவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணை தொடங்கியது.

Updated On : 23 ஜூலை 2018, 10:58 am IST
பகிர்:


சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 3-ஆவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணை தொடங்கியது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக்கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.

இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது.

Advertisement

Advertisement

இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

ஜூலை 4-இல்...இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன், அரசு சிறப்பு வழக்குரைஞர் திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர். மேலும் இந்த வழக்கில் இரு தரப்பிலும் தில்லியிலிருந்து மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் தாக்கல் செய்ய உள்ளீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் மேலும் சில ஆவணங்களைக் கூடுதலாக தாக்கல் செய்யப் போவதாகக் கூறினார்.

எனவே, கூடுதல் விவரங்கள் குறித்து மட்டும் வாதிட்டால் போதுமானதாக இருக்கும் . இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை (ஜூலை 23) முதல் வெள்ளிக்கிழமை ( ஜூலை 27) வரை தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் என உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.-க்களின் தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இன்று தொடங்கி தொடர்ந்து 5 நாள்கள் அரசு மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞர்கள் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments